மகன் சூர்யா சேதுபதிக்காக மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி.. பிரஸ்மீட்டில் ஏற்பட்ட தர்மசங்கடம்!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி, ஃபீனிக்ஸ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இந்த படம் நாளை அதாவது ஜூலை 4ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் புரோமோஷன் வேலைகளை படக்குழுவினருடன் சேர்ந்து விஜய் சேதுபதியும் பார்த்து வருகிறார். இந்நிலையில் படம் நேற்று அதாவது ஜூலை 2ஆம் தேதி பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விஜய் சேதுபதி தனது மகனுக்காக மன்னிப்பு கேட்டார்.
சூர்யா சேதுபதி முதன் முதலாக அறிமுகம் ஆகும் படம் ஃபீனிக்ஸ். இந்த படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யா சேதுபதி மட்டுமல்லாமல் வரலஷ்மி, சம்பத், வேதவர்ஷினி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர், டிரைலர் உள்ளிட்டவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் படத்தின் புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது மட்டுமல்லாமல், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியை இணையவாசிகள் நெபுடிசம் குழந்தை என ட்ரோல் செய்து வருகிறார்கள். படத்தின் முந்தைய புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், கைச்செலவுக்கு தினமும் வெறும் 500 ரூபாய் தான் அப்பா கொடுப்பார் என வருத்தத்துடன் கூறியிருந்தார். இதனை நெட்டிசன்கள் தீவிரமாக ட்ரோல் செய்தனர்.

சூர்யா சேதுபதி: இந்நிலையில் சூர்யா சேதுபதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவரது புகைப்படங்களை இணையவாசிகள் அவரை ட்ரோல் செய்ய பயன்படுத்துகின்றனர். இணையவாசிகளால் ட்ரோல் செய்யப்படுகிறார் என செய்தியாக்கிய செய்தி நிறுவனங்களும், சூர்யா சேதுபதியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்தே, புகைப்படங்களை எடுத்து பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் சம்பந்தப்பட்ட சில செய்தி நிறுவனங்கள், யூடியூப் சேனல்களுக்கு காப்பி ரைட் கேட்டு நோட்டீஸ் அனுப்பி விடுவோம், ஸ்ட்ரைக் அடித்து விடுவோம் என சூர்யா சேதுபதி தரப்பில் இருந்து மிரட்டல்கள் சென்றுள்ளது.
மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி: இதுகுறித்து விஜய் சேதுபதியிடம் கேள்வி எழுப்பியதற்கு, " தெரியாமல் நடந்திருக்கும், எங்கள் தரப்பில் இருந்து அது போல உங்களுக்கு மிரட்டல்கள் வந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனக்கு தெரியாமல் நடந்து விட்டது மன்னிச்சுக்கோங்க" என மன்னிப்பு கேட்டார். முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே தனது மகனுக்காக மன்னிப்பு கேட்கும் நிலைக்கு விஜய் சேதுபதி ஆளாகி விட்டாரே என இணையவாசிகளும் ரசிகர்களும் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











