வெற்றிமாறனுக்கு வாழ்த்து சொன்ன விஜய் சேதுபதி.. விடுதலை கூட்டணி செமயா இருக்கே
சென்னை: பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து பொல்லாதவன் படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். இதுவரை ஆறு படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் பெரும் தாக்கத்தை சினிமா துறையினரிடமும், ரசிகர்களிடமும் விதைத்திருக்கிறார் அவர். கடைசியாக அவரது இயக்கத்தில் விடுதலை திரைப்படம் வெளியானது. அடுத்ததாக டிசம்பர் 20ஆம் தேதி விடுதலை 2 படம் வெளியாகவிருக்கிறது. இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடும் சூழலில் அவருக்கு விஜய் சேதுபதி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவரது முதல் படமான பொல்லாதவன் கமர்ஷியல் படமாக உருவாகியிருந்தது. ஆனால் அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய ஆடுகளம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளியது. அந்தப் படத்திலிருந்து வெற்றிமாறன் தவிர்க்க முடியாத இயக்குநராகிவிட்டார். அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய விசாரணை, வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் வடசென்னை படம் வட சென்னைவாசிகளை தவறாக சித்தரித்துவிட்டதென்று விமர்சனமும் எழுந்தது. ஆனால் அதெல்லாம் இல்லை சரியாகத்தான் பேசியிருக்கிறார் என்றும் வெற்றிமாறனின் ரசிகர்கள் ஒருபக்கம் பேசினர்.

விடுதலை: தொடர்ந்து அவர் இயக்கிய அசுரன் படமும் தேசிய விருதை பெற்றது. அதனையடுத்து விடுதலை படத்தை இயக்கினார். இதற்கிடையே வாடிவாசல் படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்ட ப்ளானில் மாற்றம் ஏற்பட விடுதலை படமானது இரண்டு பாகங்களாக உருவானது. இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
வாடிவாசல்: நாவல்களையும், சிறுகதைகளையும் படமாக்கும் முயற்சியில் வெற்றிமாறன் இப்போது தீவிரமாக இறங்கியிருக்கிறார். அப்படி அவர் இயக்கிய விசாரணை, அசுரன் ஆகிய படங்கள் இந்திய அளவில் கவனம் ஈர்த்தன. அதேபோல் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற குறுநாவலை அதே பெயரிலேயே வெற்றிமாறன் படமாக்கவிருக்கிறார். சூர்யா கதாநாயகனாக நடிக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. அதேபோல் அவர் எப்போது வடசென்னை 2 படத்தை இயக்குவார் என்றும் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுவருகின்றனர்.
விடுதலை 2: இதற்கிடையே அவர் விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்தையும் அவர் இயக்கியிருக்கிறார். படத்தின் முதல் பாகம் பெற்ற சில விமர்சனங்கள் இதில் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருந்து வேலை செய்திருக்கிறார் அவர். படத்தின் வேலைகள் முடிவடைந்துவிட்டது. கூறப்படுகிறது. மேலும் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் படம் திரையிடப்பட்டு செம ரெஸ்பான்ஸை அள்ளியது. படமானது டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பிறந்தநாள் வாழ்த்து: இந்நிலையில் வெற்றிமாறன் இன்று தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். அந்தவகையில் நடிகர் விஜய் சேதுபதி வெற்றிமாறனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்தினை கூறியிருக்கிறார். அந்த ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











