விஜய் சேதுபதியின் மகள் நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சென்னை : விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் முகிழ்.
விஜய் சேதுபதி, ரெஜினா கசாண்ட்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தியேட்டர்களில் ரிலீசாகவுள்ள படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி
வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் செல்வன் என்ற பெயருடன் வெற்றி நாயகனாக வலம்வந்துக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. நடிப்புடன் வித்தியாசமான படங்களை தயாரித்தும் வருகிறார். விஜய் சேதுபதி என்றால் இப்படி தான் என்று ஒரு கட்டத்துக்குள் அடங்காமல் நடித்து வருகிறார்.

பல கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி
திடீரென வயதானவர் வேடத்தில் தோன்றி அசத்துகிறார். ஒரு கட்டத்தில் வில்லனாக தோன்றி மிரட்டுகிறார். சாக்லேட் பாய் கேரக்டருக்கும் தான் சளைத்தவனில்லை என்றும் நிரூபித்துள்ளார். சமையல் நிகழ்ச்சியிலும் அசத்துகிறார். பார்த்து பார்த்து கேரக்டர்களை தேர்ந்தெடுப்பதுடன் அவை அனைத்திலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

ஸ்ரீஜா விஜய் சேதுபதி நடிப்பு
புலிக்கு பிறந்தது பூனையாகாது என்ற மொழியை நிரூபிக்கும் வகையில் இவரது மகள் ஸ்ரீஜா தற்போது முகிழ் என்ற படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி தயாரித்துள்ள இந்த படத்தை புதுமுக இயக்குநர் கார்த்திக் இயக்கியுள்ளார். குழந்தை வளர்ப்பை மையமாக கொண்டு உருவாகியுள்ளது இந்தப் படம்.

தியேட்டர்களில் ரிலீஸ்
படத்தில் ஸ்ரீஜாவுடன் விஜய் சேதுபதி மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் ட்ரெயிலர் வெளியிடப்பட்டு அனைவரது பாராட்டுக்களையும் பெற்றது. முதலில் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

8ம் தேதி ரிலீஸ்
இந்த மாதம் 8ம் தேதி முகிழ் படம் தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. படத்திற்கு ரேவா என்ற பெண் இசையமைத்துள்ள நிலையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது. குடும்ப உறவுகளை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











