என்னது... 3 பாகங்களாக வெளியாகும் விஜய் சேதுபதி படமா... டைட்டிலும் மாத்திட்டாங்களா ?
சென்னை : விஜய் சேதுபதி இந்திய அளவில் பிஸியான நடிகராகி விட்டார் என்பது அனைவரும் அறிந்தது தான். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வரும் சேதுபதி, சமீபத்தில் சன் டிவி.,யில் பிரபல சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
இன்றைய தேதியில் விஜய் சேதுபதி வசம் 12 படங்கள் உள்ளன. இவர் நடித்த லாபம், துக்ளக் தர்பார் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. தற்போது கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் முக்கிய வில்லன் ரோலில் விஜய் சேதுபதி நடிக்கிறார். யாதும் ஊரே யாவரும் கேளீர், மும்பைக்கர், விடுதலை உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் இந்தியில் மெகா ப்ராஜெக்ட் வெப்சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

ரிலீசுக்கு தயாராக உள்ள படம்
அப்படி விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படங்களில் ஒன்று டைரக்டர் தீபக் சுந்தரராஜ் இயக்கும் படம். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக டாப்சி பன்னு நடித்துள்ளார். இந்த படத்தின் வேலைகள் லாக்டவுன் சமயத்திலேயே முடிக்கப்பட்டு விட்டதாம். இந்த படத்திற்கு அன்னபெல்லா சுப்பிரமணியம் என பெயரிட்டனர்.

இரண்டு கெட்அப்களில் விஜய் சேதுபதி
படத்தின் கதைப்படி விஜய் சேதுபதியும், டாப்சியும் பழங்கால ராஜா - ராணி கெட்அப்பிலும், பிறகு மாடர்ன் கெட்அப்களிலும் நடித்துள்ளனர். படத்தின் வேலைகள் முழுவதுமாக முடிக்கப்பட்ட பிறகு படத்தை பார்த்த படக்குழு அசந்து போய் விட்டனராம். அந்த அளவிற்கு எதிர்பார்த்ததை விட செமயாக வந்துள்ளதாம்.

மாற்றப்பட்ட டைட்டில்
இதனால் படத்திற்கு இன்னும் பவர்ஃபுல்லான டைட்டிலை வைத்தால் நன்றாக இருக்கும் என படக்குழு முடிவு செய்துள்ளது. ரசிகர்களையும் கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக தற்போது படத்தின் டைட்டிலை அன்னபெல்லா சேதுபதி என மாற்றி உள்ளார்களாம். ஒருவேளை படத்தில் சேதுபதி மன்னர் ரோலில் விஜய் சேதுபதி நடித்துள்ளாரா அல்லது விஜய் சேதுபதியின் படத்திற்கு மாஸ் காட்ட வேண்டும் என்பதற்காக அவர் பெயரையே டைட்டில் ஆக்கி விட்டார்களா என தெரியவில்லை.

மூன்று பாகங்களாக வெளிவரும் படம்
பேசன் ஸ்டூடியோஸ் பேனரில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் கதையை சொல்லும் போதே படத்தை மூன்று பாகங்களாக வெளியிட தயாரிப்பாளர் ஓகே சொல்லி விட்டாராம். இதனால் டைரக்டர் தீபக் சுந்தரராஜனும் ஏற்கனவே மூன்று பாகங்களுக்கும் கதையை தயார் செய்து விட்டாராம். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெய்பூரில் படமாக்கப்பட்ட படம்
பான் இந்தியன் படமாக உருவாக்கப்பட்டுள்ள அன்னபெல்லா சேதுபதி படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஜெய்பூர் அரண்மனைகளில் தான் எடுக்கப்பட்டதாம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, டாப்சி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு, மதுமிதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இரட்டை வேடத்தில் விஜய் சேதுபதி
இந்த படத்தில் விஜய் சேதுபதி, டாப்சி இருவருமே இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர். அதில் டாப்சியின் ஒரு கேரக்டர் வசதியான சிட்டி கேர்ள் ரோலாம். அன்னபெல்லா சுப்ரமணியம் என்ற கேரக்டரில் தான் விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். முழுக்க முழுக்க காமெடி கலந்து இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.

பொன்னியின் செல்வனையே மிஞ்சிட்டாங்களே
ஏற்கனவே மணிரத்னம் இயக்கும் வரலாற்று படமான பொன்னியின் செல்வன் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், மற்றொரு ராஜா கதையாக அதுவும் 3 பாகங்களாக இந்த படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. அதே சமயம் பிரம்மாண்ட படமாக, ஏராளமான மெகா ஸ்டார்கள் நடிக்கும் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்படும் பொன்னியின் செல்வன் படமே இரண்டு பாகங்களாக தான் வெளியிடப்பட உள்ளது. ஆனால் விஜய் சேதுபதி நடித்துள்ள படத்தை மூன்று பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் என்றால் அப்படி என்ன கதையாக இருக்கும் கேள்வியும் எழுந்துள்ளது.

விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு
எதுவாக இருந்தாலும் படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவித்து விட்டு, அதைத் தொடர்ந்து படத்தின் ஃபஸ்ட்லுக், டீசர், டிரைலர், ஃபஸ்ட் சிங்கிள் ஆகியவற்றை அடுத்தடுத்து வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











