விஜய் சேதுபதிக்கு இன்னும் தெளிவு வேணும்... அவருடன் இனி கூட்டணி கிடையாது... சீனு ராமசாமி அதிரடி!
சென்னை: விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படம் கடந்தாண்டு ஜூன் மாதம் வெளியானது.
சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் பலரது பாராட்டுகளையும் பெற்றது.
இந்நிலையில், ரஷ்யாவில் நடைபெறும் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் மாமனிதன் திரையிடப்படுகிறது.
இதற்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் விஜய் சேதுபதி குறித்து சீனு ராமசாமி பேசியது வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதியுடன் கூட்டணி கிடையாது:வெரைட்டியான கேரக்டர்களை தேர்வு செய்து வரும் விஜய் சேதுபதி, கடந்தாண்டு மாமனிதன் படத்தில் நடித்திருந்தார். சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான இந்தப் படம் விஜய் சேதுபதிக்கு ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றுக் கொடுத்தது. ரஜினி, கமல், பாரதிராஜா, ஷங்கர் உள்ளிட்ட திரை பிரபலங்களும் மாமனிதன் படத்தை பாராட்டியிருந்தனர்.
இந்நிலையில், இந்தப் படம் ரஷ்யாவின் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழா நாளை (ஏப் 20) முதல் 27ம் தேதி வரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதனை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் மையத்தில் மாமனிதன் படக்குழுவினருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குநர் சீனு ராமசாமி, விஜய் சேதுபதி, அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய சீனு ராமசாமி, விஜய் சேதுபதி குறித்து சில கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்தார். அதில், "விஜய் சேதுபதி ஒரு உலக நடிகன். அவருக்கு இன்னும் கொஞ்சம் விழிப்புணர்வு இருந்தால், வாழ்வை பற்றிய தெளிவு இருந்தால் அவர் போக வேண்டிய இடமே வேறு. இப்போது இந்தி வரை சென்றுள்ளார். அடுத்ததாக ரஷ்யா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாட்டு திரைப்படங்களிலும் அவர் நடிக்கலாம். ஏனென்றால் மாமனிதன் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் இதுவரை 650 முறை திரையிடப்பட்டுள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய சீனு ராமசாமி, "65 நாடுகளில் உள்ள நடுவர்கள் அனைவருமே க்ரியேட்டர்ஸ். ரஷ்யாவில் படம் திரையிடுகிறோம் என்றால், அது முடித்த பின்பு ஒரு ரஷ்ய இயக்குநர் என்னை சந்தித்து பேசுவார். இதேதான் எல்லா உலக நாடுகளிலும் நடக்கும். அப்படி தமிழர்களுடைய பெருமை விஜய் சேதுபதி மூலம் உலகம் முழுவதும் தெரிய வேண்டும். நமது கலாச்சாரம் பலரிடமும் போய்ச் சேர வேண்டும். இதுதான் என்னுடைய விருப்பம். அதற்காகத்தான் இப்படத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறோம்" என்றார்.

மேலும், "12 வருடங்களில் தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல், மாமனிதன் என 4 படங்கள் விஜய் சேதுபதியுடன் பணியாற்றியுள்ளேன். இதில் இடம் பொருள் ஏவல் மட்டும் இன்னும் வெளியாகவில்லை. இந்த 4 படங்கள், நான் இறந்தாலும் உலகத்தில் வாழக்கூடிய படங்களாக இருக்கும். விஜய் சேதுபதியின் பெயரை பெருமையை பேசக்கூடிய படங்களாக இருக்கும். மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைவது நடக்காது. ஏனென்றால் எனக்கு இன்னும் 4 படங்கள் இருக்கின்றன. விஜய் சேதுபதியை இன்னும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தான் சந்திக்க முடியும். அப்போது எனக்கு 55 வயதாகிடும்" என்றார்.
"திரையரங்குகளில் பெரிதாக வசூலிக்காத மாமனிதன், ஆஹா ஓடிடி மூலம் 51 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளது. பொது ஊடகத்தால் வெற்றி வெற முடியாத படம் ஓடிடியில் வென்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது. வாழ்வியலை பேசும் இந்த படத்தில் நடிக்க சம்மதித்த விஜய் சேதுபதிக்கும் இதை தயாரித்த யுவன் ஷங்கர் ராஜா, இசையமைத்த இசைஞானி இளையராஜா அனைவருக்கும் என் நன்றி" என சீனு ராமசாமி பேசி முடித்தார். முக்கியமாக இந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்கு இளையராஜா வரவில்லை என சீனு ராமசாமி வேதனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











