வெற்றிமாறன் என்னை ஏமாற்றிவிட்டார்.. விடுதலை இசை வெளியீட்டில் விஜய் சேதுபதி பளீச்!
சென்னை : நடிகர் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விடுதலை.
விடுதலை படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் சூரி, விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் படம் குறித்தும் மற்ற விஷயங்கள் குறித்தும் அனைவரும் பல்வேறு சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்டனர்.

வெற்றிமாறனின் விடுதலை படம்
தமிழின் மிகப்பிரபலமான இயக்குநராக இருக்கிறார் வெற்றிமாறன். இவரது கதைகளின்மூலம் பல மிரட்டல்களையும் சுவாரஸ்யங்களை அதிரடியாக கொடுத்து வருகிறார். தற்போது ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை மையமாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இளையராஜா இசையில் ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் படத்தை வெளியிடவுள்ளது.

பெருமாள் வாத்தியார் கேரக்டரில் விஜய் சேதுபதி
இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் பெருமாள் வாத்தியார் என்ற கேரக்டரில் மிகவும் அதிரடியான நடிப்பை விஜய் சேதுபதி வழங்கியுள்ளார். இதேபோல குமரேசன் என்ற கான்ஸ்டபிள் வேடத்தில் நடிகர் சூரி படத்தின் நாயகனாக நடித்துள்ளார். படத்தின் இசை மற்றுட் ட்ரெயிலர் வெளியீடு நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூரி, விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு, பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்டனர்.

விடுதலை படத்தின் இசை வெளியீடு
நிகழ்ச்சியில் அனைவரையும் கவரும்வகையில் சூரியின் பேச்சு இருந்தது. அவர் அடுத்தடுத்த ஹீரோ சப்ஜெக்ட்களில் தன்னை ஈடுபடுத்திவரும் நிலையில் தொடர்ந்து அவருக்கு காமெடி வொர்க்அவுட் ஆகுமா என்பதற்கு இனிவரும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். இதனிடையே இந்த வாய்ப்பை பெறுவதற்காக அவர் மெனக்கெட்டதையும் நிகழ்ச்சியில் சூரி காமெடியாக பகிர்ந்துக் கொண்டார். தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி சூரியை பார்த்து ஐ லவ் யூ கூறினார். அந்த அளவிற்கு சூரியின் பேச்சு இருந்தது.

ஏமாற்றிய வெற்றிமாறன்
தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி 8 நாட்கள் சூட்டிங்தான் என்று கூறி தன்னை அழைத்து சென்று வெற்றிமாறன் ஏமாற்றியதாக தெரிவித்தார். வடசென்னையில் நடிப்பதை தான் மிஸ் செய்ததால், இந்தப் படத்தில் ஜாலியாக சென்று நடித்துவிட்டு வரலாம் என்றுதான் தான் இந்தப் படத்தில் நடிக்க சென்றதாகவும் குறிப்பிட்டார். வடசென்னை 2 படத்தின் ஸ்கிரிப்டை தற்போதுதான் வெற்றிமாறன் எழுதி வருவதாகவும் படத்தின் கதையை தான் கேட்டுவிட்டதாகவும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் கூறினார்.

காக்கா இல்லாத ஊர்
காக்கா இல்லாத ஊரில் இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெற்ற நிலையில், 8 நாட்கள் தன்னை கூட்டிக் கொண்டு அங்கு சென்று வெற்றிமாறன் ஆடிஷன் நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருடன் இணைந்து வேலை செய்தது அறிவு சார்ந்ததாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். தனக்கு கிடைத்த அறிவு தன்னுடைய குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால், அவர்களையும் சூட்டிங்கிற்கு அழைத்து சென்றதாகவும் விஜய் சேதுபதி குறிப்பிட்டார்.

பெண்ணே சிறப்பு என புகழாரம்
முன்னதாக மகளிர் தினத்தையொட்டி அனைத்து மகளிருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த விஜய் சேதுபதி. பெண் இல்லாமல் வாழ்க்கையில் எதுவுமில்லை, அழகில்லை, சுவையில்லை, எந்த கருமமும் இல்லை என்று குறிப்பிட்டார். தன் வாழ்க்கையில் நிறைந்திருக்கும் பெண்களுக்கும் சகோதரிகளுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டார். மேலும் பெண்ணே சிறப்பு என்றும் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications











