Phoenix Box Office: பாக்ஸ் ஆபிஸில் நின்னு விளையாடும் VJS மகனின் பீனிக்ஸ்.. 2வது நாளில் சடன் பிக்கப்!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகம் ஆகி ஜூலை 4ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் பீனிக்ஸ். இந்த படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியுள்ளார். அனல் அரசு இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஸ்டண்ட் மாஸ்டர் என்பதால் படம் முழுவதும் எக்கச்சக்க சண்டைக் காட்சிகளை வைத்துள்ளார். இதனாலோ என்னவோ, படம் இரண்டாவது நாளில் முதல் நாளை விடவும் கூடுதலாக வசூல் குவித்துள்ளது என கூறப்படுகிறது.
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி, நானும் ரவுடி தான், சிந்துபாத் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், பீனிக்ஸ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். படத்தில் சம்பத், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படம் பலமுறை ரிலீஸ்க்கு தயாராகி ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. அதே நேரத்தில் விஜய் சேதுபதியின் மகன் என்ற காரணத்தைக் காட்டிலும், சூர்யா சேதுபதியின் நடவடிக்கைகளும், பேச்சுகளும் படத்திற்கு எதிர்மறையான விளம்பரத்தை பெற்றுக் கொடுத்தது.

அதாவது, அப்பா தினமும் வெறும் 500 ரூபாய் தான் பாக்கெட் மணியாக கொடுப்பார், நான் வேறு அப்பா வேறு என இவர் பேசியதற்கு இணையவாசிகள் சூர்யா சேதுபதியை வறுத்து எடுத்து விட்டார்கள். இது மட்டும் இல்லாமல், டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசும்போது கூட சூர்யா சேதுபதி வாயில் பபுள்கம் போட்டு மென்று கொண்டே பேசினார் என்பதும் விமர்சிக்கப்பட்டது. இதனால் அவர் வருத்தமும் தெரிவித்தார். இயக்குநர் விக்ரமன் பீனிக்ஸ் படத்தைப் பார்த்த பின்னர், தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கதாநாயகர்களுக்கான ஒரு வெற்றிடம் உள்ளது. அதனை சூர்யா சேதுபதி நிரப்புவார் என்று கூறினார். அதாவது, விஜய், அஜித், விஷாலுக்கு பின்னர் அந்த இடத்தில் சூர்யா சேதுபதி இருப்பார் என பாராட்டினார்.
படம் முழுக்க அதிரடி சண்டைக் காட்சிகள் என்பதால் இந்த படத்திற்காக சூர்யா சேதுபதி தனது உடல் எடையில் சுமார் 15 கிலோ வரை குறைத்துள்ளார். இதற்காக அவர் உடற்பயிற்சி மேற்கொண்ட வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவியது. படம் முதல் நாளில் ரூபாய் 44 லட்சங்கள் வசூலித்ததாக ஏற்கனவே பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை வெளியிடும் சாக்.நிக் வலைதளம் தெரிவித்திருந்தது.

இரண்டாவது நாள் வசூல்: இந்நிலையில் படம் இரண்டாவது நாளில் முதல் நாளை விட கூடுதலாக வசூல் குவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் மொத்த வசூல் என்பது கிட்டத்தட்ட ரூபாய் ஒரு கோடியை நெருங்கிவிட்டது எனவும் கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூபாய் 1 கோடி என்பதால் படக்குழு வசூல் ரீதியான வரவேற்பை கண்டு மகிழ்ச்சியில் உள்ளார்கள். அதே நேரத்தில் படம் விமர்சன ரீதியாக திரைக்கதையில் உள்ள தொய்வு குறித்து பலரும் எடுத்து கூறி வருவதையும் படக்குழு கவனித்து வருகிறது. மொத்தத்தில் வணிக ரீதியாக படம் வெற்றியை நெருங்கிக் கொண்டு உள்ளதால், பீனிக்ஸ் படத்தில் சண்டை செய்தது மட்டும் இல்லாமல், பாக்ஸ் ஆபிஸிலும் நின்னு விளையாடுகிறாரே விஜய் சேதுபதி மகன் என பலரும் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











