நான் இன்னும் வளரல.. என்னை தனியாக விடாத அப்பா.. சூர்யா சேதுபதி அப்படி சொன்னாராம்.. விஜய் சேதுபதி பளிச்
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் பீனிக்ஸ். இந்த படத்தை சண்டை பயிற்சி மாஸ்டர் அனல் அரசு எழுதி இயக்கியுள்ளார். இந்த படம் அடுத்த வாரம் அதாவது ஜூலை 4ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் டிரைலர் இன்று அதாவது ஜூன் 27ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசியது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், " என் படம் என்றால் கூட நான் ஏதாவது பேசுவேன். ஆனால் நான் பெற்ற பிள்ளையைப் பற்றி என்ன பேசுவது என்று தெரியவில்லை. அனல் அரசு மாஸ்டர் 2019ஆம் ஆண்டு எனக்கு கதை சொன்னார். அந்த படம் சில காரணங்களால் நடக்காமல் போனது. ஒரு நாள் மும்பையில் இருந்து வரும்போது விமானத்தில் சந்தித்து பேசினோம். இருவரும் அப்போது எங்களின் குடும்பம் குறித்து பேசிக்கொண்டோம்.
ஒரு நாள் இந்த படத்தின் கதையைச் சொன்னார். எனது மகனுக்கும் அதே வயதுதான் ஆகிறது என்று மனதிற்குள் தோன்றியது. ஆனால் நான் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. ஒருநாள் படப்பிடிப்புத் தளத்தில் வைத்து இந்த கதையில் எனது மகனை நடிக்க வைக்கவா என்று கேட்டார். எனக்கு அப்போது மிகவும் சந்தோஷமாக இருந்தது அதே நேரத்தில் பயமாகவும் இருந்தது. எனது மகன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். எனவே அவரது முடிவுகளை அவரே எடுக்க வேண்டும் என நினைத்தேன்.

நான் இன்னும் வளரல: சிந்துபாத் படத்தில் நடிக்கும் போது விமான நிலையத்தில் எல்லாம் அவனையே பழக விட்டேன். அப்போது அவனுக்கு 14 வயது இருக்கும். அப்போது எனது மகன் என்னிடம் வந்து, அப்பா என்னை தனியாக எல்லாம் விடவேண்டாம். நான் இன்னும் வளரவில்லை என்று கூறினார். என் அப்பா என்னை அப்படித்தான் வளர்த்தார். எனவே நானும் அப்படி செய்தேன். எனவே இந்த விஷயத்தில் எனது மகனே முடிவெடுக்கட்டும் என விட்டுவிட்டேன். அதேபோல கதை கேட்டான். அவனுக்கு ரொம்ப பிடித்துவிட்டது.
தொழில் மூலம்: எனது வீட்டில் அமர்ந்து நான் வேலை பார்த்த அனுபவங்கள் குறித்து மணிக்கணக்காக பேசியுள்ளேன். சில காட்சிகளில் நடிக்கும் போது சில ஐடியாக்கள் தோன்றி இருக்கும். எனது தொழில் சினிமா என்பதால் நான் குழந்தைகளிடம் அது குறித்து பேசுவேன். மனித மனமும் மூளையும் எப்படி சிந்திக்கிறது என்பதை எனது தொழில் மூலமாகத்தான் நான் சொல்லிக் கொடுக்க முடியும் என நம்புகிறேன்.
மகன் பிழைத்துக் கொள்வான்: வீட்டில் ஜனநாயகமாகத்தான் உரையாடல் வைத்துக் கொள்வோம். வளர்த்துக் கொண்டே இருப்பது அல்ல பிள்ளை, ஒரு கட்டத்திற்கு மேல் அதுவாகவே வளர்வதுதான் பிள்ளை. தனது தவறுகளை உணர்ந்து அதை திருத்திக் கொள்ளக்கூடிய நபர்தான் என்பதால் அவன் பிழைத்துக் கொள்வான் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவனுக்கு சிறு வயதில் இருந்தே மாஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வாழ்த்தி பேசிய அனைவருக்கும் நன்றி, பேசிய அனைவரும் உளமாற வாழ்த்தினீர்கள். உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்" என்று பேசினார்.


Click it and Unblock the Notifications











