மரண மாஸ் தலைவா... விஜய் சேதுபதியின் தெலுங்கு 'உப்பெனா' லுக் வெளியீடு... தெறிக்கவிடும் ரசிகர்கள்
Recommended Video
சென்னை: 'உப்பெனா' என்ற தெலுங்கு படத்தில், விஜய்சேதுபதி லுக் இன்று வெளியிடப்பட்டதை அடுத்து ரசிகர்கள் அதை டிரெண்டாக்கி உள்ளனர்.
தமிழ் சினிமாவில் நிற்க கூட நேரமில்லாமல் இருக்கும் ஒரே நடிகர் விஜய் சேதுபதி. அவரிடம் கதை சொல்ல இயக்குனர்கள் காத்திருக்கிறார்கள். கதை சொன்னவர்களும் ஏராளம்.
வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து அவர் நடித்து வருகிறார். ஹீரோ என்றில்லாமல், சிறந்த கதை என்றால் எந்த கேரக்டரிலும் நடிப்பார்.

மாஸ்டர் வில்லன்
ஹீரோவாக நடித்துக்கொண்டே, ஒரு பக்கம் வில்லனாகவும், குணசித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். விஜய்-யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் இப்போது.
இயக்குனர் ஜனநாதனின் லாபம், அறிமுக இயக்குநர் தில்லி பிரசாத் இயக்கும் துக்ளக் தர்பார், அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

தெலுங்கு வரவேற்பு
இந்தியில் ஆமிர்கானின் லால் சிங் சத்தா என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தார். இதில் அவர் கேரக்டருக்கு அங்கு வரவேற்பு கிடைத்தது. இதனால் தெலுங்கு படங்களில் நடிக்க அவருக்கு அழைப்பு வந்தபடி உள்ளன. அதன்படி உப்பெனா என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்து பிரபல ஹீரோ அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்திலும் வில்லனாக நடிக்கிறார்.

சிகரெட் புகைத்தபடி
இந்நிலையில், 'உப்பெனா' படத்தில் விஜய் சேதுபதியின் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒரு போஸ்டரில், படிய வாரிய தலைமுடியுடன், ஸ்டைலாக சிகரெட் புகைத்தபடி நிற்கிறார். மற்றொரு போஸ்டரில் எதையோ வெறுப்பாகப் பார்த்தபடி, அம்பாசடர் காரில் கை வைத்தவாறு நிற்கிறார். இந்த போஸ்டர்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. மரணமாஸ் தலைவா, வேற லெவல் என்று கூறி வருகின்றனர்.

கீர்த்தி ஷெட்டி
இந்தப் படத்தை புச்சிபாபு சனா என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இதில் பஞ்சா வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக நடிக்கிறார். கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் ஏப்ரல் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











