பூரி ஜெகன்னாத் படத்தை நிறைவு செய்த விஜய் சேதுபதி.. சீக்கிரமே செம ஆக்ஷன் படம் வருது!
சென்னை: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கௌர் மற்றும் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணைந்து உருவாக்கும் #PuriSethupathi திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. பூரி கனெக்ட்ஸ் மற்றும் JB மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இப்படத்தை தயாரிக்கின்றன.
மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த அதிரடி மாஸ் எண்டர்டெயினர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழுவினர் கொண்டாடினர். இந்த மகிழ்ச்சியான தருணத்தை வெளிப்படுத்தும் விதமாக, பூரி ஜெகன்னாத், விஜய் சேதுபதி, சார்மி கௌர் ஆகியோர் இடம்பெற்ற உணர்வுபூர்வமான வீடியோ ஒன்றையும் வெளியிட்டனர்.

அந்த வீடியோவில், பூரி ஜெகன்னாத் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என்று விஜய் சேதுபதி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவர்களை அதிகம் மிஸ் செய்யப்போவதாகவும் அவர் கூறினார். பூரி மற்றும் சார்மி இருவரும் இதே போன்ற உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டனர். விஜய் சேதுபதி பூரியின் ஜாக்கெட்டை வேடிக்கையாகப் பாராட்டியது வீடியோவின் ஒரு சிறப்பம்சமாக அமைந்தது.
இப்படத்தை பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து தயாரிக்கின்றனர். JB மோஷன் பிக்சர்ஸ் சார்பில் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணை தயாரிப்பாளராக உள்ளார். சம்யுக்தா நாயகியாக நடிக்க, தபு மற்றும் துனியா விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
'அர்ஜுன் ரெட்டி' மற்றும் 'அனிமல்' போன்ற படங்களுக்கு அதிரடியான இசையமைத்து தேசிய விருது பெற்ற ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், இத்திரைப்படத்திற்கும் இசையமைக்கிறார். பிரம்மாஜி மற்றும் VTV கணேஷ் நகைச்சுவை கதாபாத்திரங்களில் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளனர்.
படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், படக்குழு விரைவில் புரமோஷன் பணிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத் தலைப்பு அறிமுகம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா அளவில் இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ள இந்த படத்தில் தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த நிலையில், அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள அரசன் படத்திலும் விஜய் சேதுபதி இணைந்துள்ளார்.
சமீபத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் சீசன் 3 வெப் சீரிஸிலும் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்த ஆண்டு விஜய் சேதுபதி நடித்த ஏஸ் திரைப்படம் அவருக்கு கை கொடுக்கவில்லை என்றாலும், தலைவன் தலைவி திரைப்படம் 100 கோடி வசூல் ஈட்டிய வெற்றிப் படமாக மாறியது குறிப்பிடத்தக்கது. ட்ரெயின், பிசாசு 2 உள்ளிட்ட படங்களும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











