Thalaivan Thalaivi Box Office - வசூலில் டல் அடிக்கிறதா தலைவன் தலைவி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?
சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய தலைவன் தலைவி திரைப்படம் கடந்த 25ஆம் தேதி வெளியானது. ட்ரெய்லருக்கு கிடைத்த வரவேற்பால் ரசிகர்கள் பலரும் படத்துக்கு ஆர்வத்துடன் சென்றார்கள். அவர்களது ஆர்வத்தை படம் பொய்யாக்கவில்லை. குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக படம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் படத்தின் நான்காவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
முன்னணி மற்றும் திறமை வாய்ந்த ஹீரோக்களில் ஒருவரான விஜய் சேதுபதி இடையில் வில்லனாக நடிக்க சென்றுவிட்டார். அவரது ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதின் பேரில் மீண்டும் முழு நேர ஹீரோவாக மாறியிருக்கிறார். அப்படி அவர் நடித்த மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியையும், ஏஸ் திரைப்படம் தோல்வியையும் சந்தித்தன. இப்போது அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் தலைவன் தலைவி படத்தில் நடித்திருக்கிறார்.
படம் ரிலீஸ்: பாண்டிராஜின் படங்கள் என்றாலே அது குடும்ப உறவுகள் மையப்படுத்தியதாக இருக்கும். அந்த லைனைத்தான் இந்தப் படத்திலும் கையிலெடுத்தார் அவர். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். மேலும் சரவணன், தீபா, யோகிபாபு என பலர் நடித்திருக்கிறார்கள். கணவன் - மனைவிக்கு இடையே வரும் சண்டைதான் படத்தின் பிரதானம். படமானது கடந்த 25ஆம் தேதி வெளியானது.

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி: ரசிகர்கள் பலரும் ஆர்வத்தோடு படம் பார்க்க சென்றார்கள். படத்தின் முதல் காட்சி முடிந்தவுடனேயே படம் கண்டிப்பாக ஹிட் என்ற பேச்சு ஓட ஆரம்பித்துவிட்டது. பலர் தங்களது மனைவி, குடும்பத்துடன் படம் பார்க்க சென்று ரசித்து, சிரித்துவிட்டு வருகிறார்கள். எனவே குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படம் என்ற வரிசையில் இணைந்துவிட்டது தலைவன் தலைவி.
25 கோடி ரூபாய் வசூல்: விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போடுகிறது படம். மொத்தமாக 25 கோடி ரூபாயை படம் இதுவரை வசூலித்துவிட்டதாக படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்துவிட்டது. அதன் காரணமாக சேதுவின் ரசிகர்களும், படக்குழுவும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மீண்டும் இதே கூட்டணி இணைய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
நேற்றைய வசூல்: இந்நிலையில் தலைவன் தலைவி படம் நான்காவது நாளான நேற்று எவ்வளவு வசூலித்திருக்கிறது என்கிற விவரத்தை Sacnilk வலைதளம் வெளியிட்டிருக்கிறது. அந்த வலைதளம் வெளியிட்டிருக்கும் தகவல்படி, நேற்று அப்படம் 3 கோடி ரூபாய்தான் வசூலித்திருக்கிறதாம். அதேசமயம் நேற்று முன்தினம், அதற்கு முந்தைய நாளில் எல்லாம் படத்தின் வசூல் ஏறுமுகமாகவே இருந்தது. நேற்று திங்கட்கிழமை என்பதால்தான் வசூல் கொஞ்சம் டல்லடித்துவிட்டதாகவும் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரத்தில் பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
படத்தின் மைனஸ்: முன்னதாக படம் பலரால் ரசிக்கப்பட்டாலும் ஒருதரப்பினரால் விமர்சிக்கவும்படுகிறது. அதாவது படம் முழுக்க விஜய் சேதுபதியும், நித்யா மேனனும் கத்திக்கொண்டே இருக்கிறார்கள். கணவன் - மனைவி இடையே நடக்கும் சண்டையை பதிவு செய்வதில் அதிக கவனம் எடுத்துக்கொண்ட இயக்குநர், அவர்கள் சமாதானம் ஆகும் விஷயத்திலும், இந்த கத்தல் விஷயத்திலும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். அதுமட்டுமின்றி ஸ்க்ரீன் ப்ளேவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இதையெல்லாம் இயக்குநர் கொஞ்சம் கவனித்திருந்தால் படம் மேற்கொண்டு ஹிட்டாகியிருக்கும் என்ற கருத்துக்களும் எழுந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











