அஜித் படத்தில் விஜய் சேதுபதி.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே - ரசிகர்கள் ஆச்சரியம்
சென்னை: Vijay Sethupathy in Ajith Movie (அஜித் படத்தில் விஜய் சேதுபதி) அஜித் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி தோன்றும் காட்சி வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கோலிவுட்டில் துணை கதாபாத்திரங்களில் நடித்து அதன் பிறகு ஹீரோவானவர் விஜய் சேதுபதி. புதுப்பேட்டை, நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களில் ஒரு சில காட்சிகளில் தலை காண்பித்த அவர், தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது நடிப்பு அனைவரையும் மிரள வைத்தது. இதனையடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்தன.

தொட்டதெல்லாம் ஹிட்: தென்மேற்கு பருவக்காற்று மூலம் கவனம் ஈர்த்ததை அடுத்து அவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், பீட்சா, சூதுகவ்வும் படங்கள் வரிசையாக ஹிட்டடித்தன. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் வெளியாகி, அதில் விஜய் சேதுபதியின் நடிப்பும் வித்தியாசமாக இருந்ததால் முன்னணி ஹீரோக்கள் வரிசையில் நீண்ட போராட்டத்துக்கு பிறகு இணைந்தார்.
டெம்ப்ளேட்டை உடைத்த விஜய் சேதுபதி: நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற டெம்ப்ளேட்டுக்குள் சிக்காமல் அதை உடைத்து வில்லன் கதாபாத்திரத்திலும் கலக்க ஆரம்பித்தார். அந்தவகையில் அவர் பேட்ட, மாஸ்டர், விக்ரம் படங்களில் ஏற்றிருந்த நெகட்டிவ் கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் அவர் ஹீரோவாக நடிக்கும் படங்கல் சமீபகாலமாக பெரும் சொதப்பலாகவும், கடும் சோதனையாகவும் அவருக்கு அமைந்துவருகின்றன.
ஹிந்தியில் விஜய் சேதுபதி: இருப்பினும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத விஜய் சேதுபதி தொடர்ந்து கதைக்கு தேவை என்றால் எந்த கதாபாத்திரத்திலும் நடிப்பேன் எங்கும் நடிப்பேன் என்ற வகையில் ஹிந்தியில் வெளியான ஃபர்ஸி வெப் சீரிஸில் நடித்தார். அதேபோல் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் வில்லனாக நடித்துவருகிறார். அதுமட்டுமின்றி கத்ரீனா கைஃபுடன் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்திலும் நடித்திருக்கிறார்.
காரணம் என்ன?: சினிமாவில் ஆரம்பத்தில் மிகுந்த போராட்டத்தை சந்தித்தவர் என்பதால் சினிமாவில் நெளிவு, சுழிவுகளை அறிந்து வைத்திருப்பதாலும்தான் அவரால் இவ்வாறு நடிக்க முடிகிறது என பலர் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி இப்போது அவர் ஹீரோ, வில்லன் என கொண்டிருக்கும் பன்முகத்தன்மை ரசிகர்களால் கொண்டாடப்பட்டும்வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் விஜய் சேதுபதி அஜித் படத்தில் இடம்பெற்றிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
ஆழ்வாரில் விஜய் சேதுபதி: அஜித், அசின் நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான படம் ஆழ்வார்., செல்லா அய்யாவு என்பவர் இயக்கிய அந்தப் படம் அஜித்தின் கரியரில் பெரும் தோல்விப் படமாக அமைந்துவிட்டது. ஆனால் அந்தப் படத்தின் ஒரு காட்சி தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. அதாவது, ஒரு காட்சியில் கம்ப்யூட்டரில் காவல் துறை அதிகாரி அஜித்தின் புகைப்படத்தை தேடிக்கொண்டிருப்பார்.

அப்போது வரிசையாக பலரின் புகைப்படங்கள் அந்த கம்ப்யூட்டரில் காண்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கும். அந்தப் புகைப்படங்களில் விஜய் சேதுபதியின் புகைப்படமும் இடம் பெற்றிருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மனுஷன் தன்னோட கரியரின் ஆரம்பத்தில் பெரும்பாலான படங்களில் தோன்றியிருக்கிறார் எனவும், அஜித் படத்தில் ஒரே ஒரு நொடியில் புகைப்படத்தில் மட்டும் இடம்பெற்ற ஒருவர் இன்று பான் இந்தியா அளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அவரது விடாமுயற்சியை புரிந்துகொள்ளலாம் என புகழ்ந்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











