விஜய்சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி இணையும் க/பெ.ரணசிங்கம் - தண்ணீர் அரசியல்
சென்னை: ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் மற்றும் தர்மதுரை ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் மீண்டும் இணைந்து நடிக்கும் திரைப்படம் க/பெ.ரணசிங்கம். தண்ணீர் இல்லாமல் தவிக்கும் விவசாயிகளின் பின்னணியில் இருக்கும் ஆழமான அரசியல் தான் இந்தப் படத்தின் கதை என்று இயக்குநர் கூறியுள்ளார்.
இயற்கையான மற்றும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவதில் நடிகர் விஜய் சேதுபதி தனித்து நிற்பவர். அதிலும் கிராமத்து பின்னணி கொண்ட கதைக்களம் என்றால் சொல்லவே வேண்டாம். ஒற்றை ஆளாகவே படத்தை நகர்த்திக் கொண்டு செல்வார். இது தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி கருப்பன் திரைப்படம் வரை தொடர்கிறது.

தற்போது விஜய் சேதுபதி, கருப்பன் திரைப்படத்திற்கு பின்னர், நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் கிராமத்து கதைக்களத்தில் களம் இறங்கவிருக்கிறார். அதிலும் வறண்ட பூமியான ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களைச் சுற்றியே கதை பிண்ணப்பட்டிருக்கிறது. இந்தப் படத்திற்கு க/பெ.ரணசிங்கம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் திரைப்படம் க/பெ.ரணசிங்கம். இந்த திரைப்படத்தை அறம், ஐரா, தும்பா உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த திரைப்படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுத, ஜிப்ரான் இசையமைக்கப் போகிறார்.
இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷும், ஜி.வி.பிரகாஷின் சகோதரி பவானி ஸ்ரீயும் நடிக்கின்றனர். ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் மற்றும் தர்மதுரை ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் மீண்டும் இணைந்து நடிக்கும் திரைப்படம் க/பெ.ரணசிங்கம்.
இவர்கள் இணைந்து நடித்த ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் மற்றும் தர்மதுரை ஆகிய திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது அதுமட்டுமின்றி அவர்களின் ஜோடி பொருத்தம் திரையில் பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது என்றும் மக்களிடையே பேசப்பட்டது. இவர்கள் தனித்தனியாக நடிப்பில் புகுந்து விளையாடுவார்கள். இப்பொழுது அவர்கள் இணைந்து நடிக்கும் க/பெ.ரணசிங்கம் திரைப்படத்தை ரசிகர்கள் மிக ஆர்வமாக எதிர்ப்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் விவசாயிகள் பின்னணியில் இருக்கும் ஆழமான யதார்த்தமான அரசியலை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகவுள்ளதாக இயக்குநர் கூறியுள்ளார். கிராமத்து கதைக்களத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











