விஜய் சேதுபதியின் அடுத்த படம் சூது கவ்வும்... ஹாட் பிஸினஸ்!
கோடம்பாக்கத்தில் இன்றைய தேதிக்கு மகா பிஸியான நடிகர் விஜய்... ஸாரி விஜய் சேதுபதி. வரும் 2017 வரை... கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு மனிதர் படுபிஸி.

சின்னச் சின்ன ரோல்களில்...
ரொம்ப மெதுவாகத்தான் இவரது கேரியர் ஆரம்பித்தது. லீ, வெண்ணிலா கபடிக் குழு போன்ற படங்களில் சின்னச் சின்ன ரோல்களில் தலை காட்டிக் கொண்டிருந்தவருக்கு, வாழ்க்கை கொடுத்தது சீனு ராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று.

சுந்தர பாண்டியன்
ஆனால் இந்தப் படம் முதலில் சரியாகப் போகவில்லை என்பதுதான் உண்மை. தொடர்ந்து வந்த விமர்சனங்கள், விருதுகள் இந்தப் படத்துக்கு உயிர் கொடுத்தன.
இருந்தாலும், விஜய் சேதுபதிக்கு ஹீரோ வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. இந்த நிலையில் சுந்தரபாண்டியனில் கிட்டத்தட்ட வில்லன் வேடத்தில் நடித்தார். படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

பீட்சா, நகொபகா
அதற்குள் அவர் நடித்த பீட்சா படம் வெளியாகிவிட, கவனிக்கப்படும் நடிகராக மாறினார் விஜய் சேதுபதி. அந்ததப் படத்தின் பெரும்பாலான காட்சிகளை தனது அலட்டிக் கொள்ளாத நடிப்பால் கவர்ந்தார் விஜய் சேதுபதி.
அதற்கடுத்து வந்த நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், அவருக்கு தமிழின் முக்கிய ஹீரோ என்ற அந்தஸ்தைக் கொடுத்துவிட்டது.

7 படங்களில் பிஸி..
இப்போது கைவசம் சூதுகவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரம்மி, பத்மினியும் பண்ணையாரும், வசந்தகுமாரன், சங்குதேவன், மெல்லிசை என 7 படங்கள் உள்ளன. இன்னும் சில படங்களில் நடிக்க பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய் சேதுபதியின் டெக்னிக்
படங்களைத் தேர்வு செய்வதில் விஜய் சேதுபதி கடைப்பிடிக்கும் உத்தி, வளரும் ஹீரோக்கள் கவனிக்க வேண்டிய ஒன்று.
குறும்படங்கள் இயக்கிய அனுபவசாலி இயக்குநர்களின் முதல் படங்களுக்கு இவர் தாராளமாகக் கால்ஷீட் தருகிறார். முதல் படம் என்பதால் வெகு சிரத்தையுடன் அவர்களும் படங்களை உருவாக்க, அது நல்ல வெற்றியைத் தருகிறது.
ஏற்கெனவே அவர் நடித்தது, இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் பெரும்பாலும் குறும்பட இயக்குநர்களின் கைவண்ணம்தான்!


Click it and Unblock the Notifications











