விஜய் மகன் படத்தில் இத்தனை வாரிசு நட்சத்திரங்களா?.. உண்மையா? இல்லை உருட்டான்னு தெரியலையே?
சென்னை: நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. லைகா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் படம் இயக்கப் போவதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. ஆனால், அதன் பின்னர் அந்த படம் என்ன ஆனது என்றே தெரியாமல் இருந்த நிலையில், தற்போது ஜேசன் சஞ்சய் படம் இயக்க ஆரம்பித்து விட்டார் என்கின்றனர்.
நடிகர் கவின் தான் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியானது. ஸ்டார் படத்தின் ரிலீஸுக்கு முன்பாக பேசும் போது கூட கவின் அதுபற்றி கூறியிருந்தார். வெறும் பேச்சு வார்த்தை மட்டுமே நடந்தது. ஆனால், உறுதியாகவில்லை என்றார்.

இந்நிலையில், சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரமைத் தான் ஜேசன் சஞ்சய் இயக்கப் போவதாக லேட்டஸ்ட் தகவல்கள் உலா வருகின்றன.
வேட்டைக்காரன்: கடந்த 2009ம் ஆண்டு விஜய் நடித்து வெளியான வேட்டைக்காரன் படத்தில் "நான் அடிச்சா தாங்க மாட்ட" பாடலுக்கு அப்பா விஜய்யுடன் நடனமாடி தமிழ் சினிமாவில் அசத்தல் என்ட்ரி கொடுத்தார் விஜய் மகன் ஜேசன் சஞ்சய். அதன் பின்னர் வெளிநாட்டில் இயக்கம் தொடர்பான படிப்பை படித்து வந்த அவர் சில குறும்படங்களையும் இயக்கி இருந்தார். இந்நிலையில், லைகா தயாரிப்பில் படம் இயக்கப் போகிறார்.

தாத்தாவை போல: விஜயகாந்த், ரஜினிகாந்த், பாக்கியராஜ் என பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரை போல அவரது பேரனான ஜேசன் சஞ்சயும் இயக்குநராக தமிழ் சினிமாவில் களமிறங்க முடிவு செய்துள்ளார். அப்பா விஜய்யை போல ஹீரோவாகி விடுவார் என எதிர்பார்த்த நிலையில், டைரக்ஷனை ஜேசன் சஞ்சய் கையில் எடுத்திருப்பதும் நல்ல முடிவு தான் எனக் கூறுகின்றனர்.

வாரிசுகளின் அணிவகுப்பு: சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கப் போவதாக கூறுகின்றனர். மேலும், அந்த படத்தில் ஹீரோயினாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கப் போகிறார் என்றும் ஏ.ஆர். ரஹ்மான் மகன் ஏ.ஆர். அமீன் இசையமைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்திற்கு பெயர் நெப்போ கிட்ஸா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் லைகா நிறுவனம் வெளியிடும் என தெரிகிறது. அப்போது தான் விஜய் மகன் இயக்கும் படத்தில் யாரெல்லாம் இருக்கின்றனர் என்பது தெளிவாக தெரியவரும்.



Click it and Unblock the Notifications











