ஜனநாயகன் ரிலீஸ் தேதி வரல.. ஜேசன் சஞ்சய் ‘சிக்மா’ ரிலீஸ் தேதி வந்துடுச்சு.. எப்போ தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சராகவே விஜய் மாறிய நிலையிலும் இன்னமும் ஜனநாயகன் படத்துக்கான சென்சார் பஞ்சாயத்து முடிந்து ரிலீஸ் தேதியை கேவிஎன் நிறுவனம் அறிவிக்கவில்லை. இந்நிலையில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ள 'சிக்மா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் மற்றும் சங்கீதா விஜய் இடையே விவாகரத்து பஞ்சாயத்து வெடித்துள்ள நிலையில், விஜய்யின் அரசியல் கட்சி தொடக்கம் முதல் அவர் முதலமைச்சராக பதவியேற்றது வரை விஜய்யின் மனைவி, மகன், மகள் என யாருமே வரவில்லை.

விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர், அம்மா ஷோபா சந்திரசேகர், மாமாவின் மகள்கள் உள்ளிட்டோரே அனைத்து விழாக்களிலும் பங்கேற்று வருகின்றனர்.
அப்பாவுடன் அறிமுகம்: வேட்டைக்காரன் படத்தில் "நான் அடிச்சா தாங்கமாட்ட" பாடலுக்கு முதன்முறையாக அப்பா விஜய்யுடன் ஆட்டம் போட்டு சினிமாவில் அறிமுகமானார் ஜேசன் சஞ்சய். விஜய்க்கு அடுத்து இவரும் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாத்தாவை போல இயக்குநராக அவதாரமெடுத்துள்ளார். அப்பா விஜய்யுடன் மகள் திவ்யா சாஷாவும் தெறி படத்தில் நடித்தார். ஆனால், அதன் பின்னர் சினிமா பக்கம் கவனம் செலுத்தாமல் பட்டம் பெற்று படிப்பு பக்கம் தனது கவனத்தை அவர் திருப்பிவிட்டார்.

டைரக்டர் ஜேசன் சஞ்சய்: தமிழ் சினிமாவில் லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள சிக்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் ஜேசன் சஞ்சய். சந்தீப் கிஷன், கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகியுள்ள சிக்மா திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், அதன் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை தற்போது லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சிக்மா ரிலீஸ் தேதி: ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ள ஆக்ஷன் படமான 'சிக்மா' வரும் ஜூலை 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பா விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு போட்டியாக வெளியாகுமா என சர்ச்சைகள் வெடித்த நிலையில், ஜூலை இறுதியில் தான் படம் ரிலீஸ் என தெளிவுப்படுத்தியுள்ளனர்.
ஜனநாயகன் ரிலீஸ் எப்போ?: ஜூலை 31ம் தேதி வெளியாகவுள்ள ஜேசன் சஞ்சயின் படத்தின் ரிலீஸ் தேதியே அதிகாரப்பூர்வமாக வெளியாகி விட்டது. ஆனால், முதலமைச்சராகவே விஜய் மாறிய பின்னரும் ஜன நாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்று தராமல் மத்திய சான்றிதழ் வாரியம் இழுத்தடிப்பது ஏன் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 18ம் தேதி ஜனநாயகன் வெளியாகும் என்றும் அதற்குள் சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக ஜன நாயகன் ரிலீஸ் தேதி வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications