சச்சின் லவ்ஸ் ஷாலினி.. அதே வெடி சிரிப்பு, அதே காதல்.. விஜய் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்
சென்னை: கடந்த சில வருடங்களாக ஏற்கனவே வெளியாகி ஹிட் ஆன படங்களை டிஜிட்டல் தரத்திற்கு மாற்றம் செய்து ரீ ரிலீஸ் செய்து வருகின்றனர். அதுபோன்று வெளியான ஆளவந்தான், கில்லி, சந்திரமுகி, தளபதி, பில்லா, மங்காத்தா போன்ற படங்களும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இப்படத்தை திரையில் பார்க்காத இளைஞர்கள் கண்டு ரசித்து குதூகலம் அடைந்தனர். அதேபோன்று விஜய் நடிப்பில் கிரிக்கெட் வீரரின் பெயரை கொண்ட ஒரு படம் ரீ ரிலீஸ் ஆகிறது. இதனை கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
விஜய் நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியானது. இப்படத்தில் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன், சந்தானம், பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இயக்குநர் ஜான் இயக்கத்தில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். படம் முழுக்க வடிவேலு காமெடியும், விஜய் - ஜெனிலியாவின் காதல் காட்சிகள் என ரகளை செய்திருந்தார் இயக்குநர் ஜான். இப்படத்திற்கு உன்னாலே உன்னாலே பட இயக்குநர் ஜீவாதான் கேமராமேன். அவர் கண்கள் வழியே பார்த்தது போன்ற உணர்வாய் பிரதிபலித்திருக்கும்.

ஏப்ரல் 18ஆம் தேதி ரிலீஸ்: தமிழ் சினிமாவில் ரீ ரிலீஸ் கலாச்சாரம் தொடங்கியிருக்கும் நிலையில், சச்சின் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு முடிவு செய்திருக்கிறார். இப்படத்திற்கான புரோமோஷன் காட்சிகளை பார்க்கும் போது திரையுலக பிரபலங்களே வியந்து போயுள்ளனர். ஒரு புதிய படத்திற்கு புரோமோஷன் செய்வது போன்றே சச்சின் படத்திற்கும் விளம்பரம் செய்து வருகிறார். ஒரு பக்கம் இயக்குநர் ஜான் சச்சின் படத்தில் நடந்த அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். சச்சின் படத்தை பார்க்க ஆவலோடு இருக்கும் ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சர்ப்ரைஸ் அளித்துள்ளார். இப்படம் வரும் 18்ஆம் தேதி ரிலீஸ் செய்யும் என தேதியை குறித்து விட்டார்.
20 வருட பயணம்: சச்சின் படம் வெளியாகி இன்றுடன் இருபது வருடங்களை நிறைவு செய்திருக்கிறது. ஆனாலும் இப்படத்தின் மீதான காதல் இன்றளவும் குறையவில்லை. கில்லி, திருமலை போன்ற கமர்ஷியல் படங்களுக்கு நடுவில் ஒரு காதல் படத்தில் விஜய் நடித்திருப்பது ஆச்சரியத்தை அளித்திருக்கிறது. இன்றைக்கும் தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் படமாகவும் சச்சின் இருக்கிறது. படத்தில் இடம்பெறும் விஜய் -ஷாலினி காட்சிகள் அட்டகாசமாக இருக்கும். இப்படம் வெளியாவதற்கு முன்பு அஜித்தை கிண்டல் செய்வது போன்று பாடல்கள் உருவானதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், இயக்குநர் ஜான் மகேந்திரன் அதற்கு மறுப்பு தெரிவித்தார். ஒரு நாளும் விஜய் அப்படி நினைத்தது இல்லை. அஜித்திற்கும் விஜய்க்கும் இருக்கும் நட்பை பற்றி நன்கு அறிந்தவன் என்ற முறையில் கூறுகிறேன் என ஜான் தெரிவித்தார்.

சச்சின் பட டிரைலர்: பெரும் ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்களுக்கு சச்சின் படம் 4கே தரத்தில் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பயங்கர குஷியில் இருக்கிறார். 20 வருடத்திற்கு பின்பு வெளியாகும் விஜய் படத்தை ரசிகர்கள் எப்படி ரசிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. முன்னதாக படத்தை டிஜிட்டல் தரத்திற்கு உயர்த்தி பாடல்கள் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இதனை கலைப்புலி எஸ்.தாணு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டார். சச்சின் படத்தின் ரீ ரிலீஸ் டிரைலரை முதல் முறை பார்ப்பது போன்றே ரசிகர்களும் குதூகலமடைந்துள்ளனர். திரையரங்கில் ஏசியே தேவை இல்லை, படமே கூலாகத்தான் இருக்கும் என தெரிவிக்கின்றனர்.

கில்லியை மிஞ்சுமா சச்சின்: கடந்தாண்டு விஜய் நடிப்பில் உருவாகி மெகா ஹிட் ஆன கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்திற்கு 2004 இல் இருந்த வரவேற்பை விட கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. ரஜினி, கமல் படங்களை காட்டிலும் ரி ரீலிஸிலும் விஜய் கொடி கட்டி பறந்தார். அதேபோன்று தற்போது சச்சின் படமும் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. ரசிகர்கள் வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கையில் தயாரிப்பாளர் காத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











