TVK Vijay: தடுமாறி விழுந்த விஜய்.. கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம்.. நல்லவேளை தப்புச்சுட்டாரு!
காரைக்குடி: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் ஏப்ரல் 10 தேதியான இன்று காரைக்குடி அதாவது, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார். இதற்காக சென்னையில் இருந்து மதுரைக்கு தனி விமானத்தில் சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக காரைக்குடிக்கு சென்று அடைந்தார். வழிநெடுகிலும் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்ததால் காரைக்குடியில் விஜய்க்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்த நேரத்திற்கு சென்று பேச முடியவில்லை. இது அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த பிரச்சாரத்தில் விஜய் ஏற்கனவே திட்டமிட்டபடி தனது பிரசார வாகனத்தில் இருந்து இறங்கி, சாலையில் சைக்கிள் ஓட்டி மக்களை கவர்ந்தார். விஜய் சட்டென தனது பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே இறங்கியதால் அவரைச் சுற்றிலும் அவரது ரசிகர்கள் ஆரவாரத்துடன் ஓடி வந்தனர். மேலும் அவர் சைக்கிள் ஓட்டிச் சென்றதால், பலரும் அவரது சைக்கிளின் முன்னும் பின்னும் என உடன் ஓடிச் சென்றனர். இதனால் விஜயால் சரியாக சைக்கிள் ஓட்ட முடியவில்லை.

தடுமாறி விழுந்த விஜய்: ஒரு கட்டத்தில் கூட்ட நெரிசல் அதிகமாகவே, நெரிசல் காரணமாக விஜய் தடுமாறி கீழே விழுந்தார். நல்வாய்ப்பாக விஜயின் பாதுகாவலர்கள் விஜய்யை கை தாங்கலாக பிடித்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. விஜய் தடுமாறி கீழே விழுந்தாலும் அவருக்கு இதில் எந்த காயமும் ஏற்படவில்லை. விஜய் தடுமாறி கீழே விழுந்தது அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு சற்றே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
புது யுத்தி: நடிகர் விஜய் தனது பிரசாரத்தில் பல யுக்திகளை கையாண்டு வருகிறார். ஏற்கனவே சென்னை மற்றும் கடலூரில் அவருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியும், பிரச்சாரத்தை செய்யாமல் ரத்து செய்தார். இந்நிலையில் காரைக்குடிக்கு விஜய் சென்றும் தனது பிரசாரத்தை செய்ய முடியாமல் போனது தவெகவினருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சைகை: காரைக்குடி வேட்பாளரான பிரபுவுக்கு வாக்களிக்கும் படி விஜய் சைகை மூலம் வாக்கு சேகரித்தார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. விஜய் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்தது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு செய்தியாக மாறி உள்ளது.


Click it and Unblock the Notifications











