Vijay Sun TV: “எடிட்டிங் வேற டிப்பார்ட்மெண்ட்..” ஜவான் அட்லீ-விஜய் சர்ச்சையில் சன் டிவி விளக்கம்!
சென்னை: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தை அட்லீ இயக்கியுள்ளார்.
கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி, சன் டிவியில் டெலிகாஸ்ட் ஆனது.
அப்போது விஜய் குறித்து அட்லீ பெருமையாக பேசியது எடிட் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், சன் டிவி தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் சர்ச்சையில் சன் டிவி விளக்கம் : ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கினார். விஜய் - அட்லீ காம்போவில் உருவான இந்த மூன்று படங்களும் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் அடித்தன. இதனைத் தொடர்ந்து அட்லீ இயக்கியுள்ள திரைப்படம் ஜவான். பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்துள்ள இந்தப் படம் வரும் 7ம் தேதி வெளியாகிறது.
ஜவான் மூலம் பாலிவுட்டில் தடம் பதித்துள்ள அட்லீ, இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் குறித்து நெகிழ்ச்சியாக பேசியிருந்தார். கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற ஜவான் இசை வெளியீட்டு விழாவில், ஷாருக்கான் உட்பட பலரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அட்லீ, "ஜவான் உருவாக என்னோட அண்ணன், தளபதி விஜய்தான் காரணம்" எனக் கூறினார். மேலும் தன்னை கம்ஃபர்ட் ஜோனில் இருந்து வெளியே கொண்டு வந்ததும் விஜய்ண்ணா தான் என பேசியிருந்தார்.

அட்லீயின் இந்த பேச்சு விஜய் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே வைரலானது. இந்நிலையில், ஜவான் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி, நேற்று சன் டிவியில் ஒளிபரப்பானது. அப்போது விஜய் குறித்து அட்லீ பேசிய காட்சிகள் இடம்பெறவில்லை. அட்லீ பேசியதில் விஜய்யை பற்றி குறிப்பிட்டிருந்த அனைத்தும் எடிட் செய்து ஒளிபரப்பப்பட்டது. இந்தச் சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நெல்சன் இயக்கிய இந்தப் படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்தாலும், முதலுக்கு மோசமில்லாமல் வசூல் செய்திருந்தது. அதேநேரம் ரஜினி - நெல்சன் கூட்டணியில் வெளியான ஜெயிலர் வெற்றிப் பெற்றதால், பீஸ்ட் படத்துக்கு எதிரான ட்ரோல்கள் அதிகமாகின. மேலும், ரஜினி, நெல்சனுக்கு கலாநிதி மாறன் கார் கிஃப்ட் கொடுத்ததும், விஜய்க்கு எதிரான மூவ் என சொல்லப்பட்டது. இந்த சர்ச்சைகள் அடங்கும் முன்னரே, ஜவான் இசை வெளியீட்டு விழாவில் விஜய் குறித்து அட்லீ பேசியதை சன் டிவி எடிட் செய்து ஒளிபரப்பியதும் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜவான் இசை வெளியீட்டு விழாவில், விஜய் பற்றி அட்லீ பேசியதை சன் டிவி எடிட் செய்யவில்லை என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஜவான் இசை வெளியீட்டு விழாவில் சன் டிவி அபிஸியல் பாட்னர் இல்லையென்றும், அந்நிகழ்ச்சியின் டெலிகாஸ்ட் உரிமையை வாங்கிய ப்ரொடக்ஷன் டீம் தான் எடிட் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரம் மட்டுமே ஸ்லாட் ஒதுக்கப்பட்டதால், அட்லீ பேசியது எடிட் செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக சன் பிக்சர்ஸின் அடுத்த படத்தை அட்லீ இயக்கவுள்ளதாகவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications