கோலிவுட்டில் இருந்துபோய் பாலிவுட்டைக் கலக்கிய படங்கள்
சென்னை: அண்மை காலமாக கோலிவுட் படங்களை ரீமேக் செய்ய பாலிவுட் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
கோலிவுட்டில் வெற்றி பெற்ற படங்களை தமிழ் இயக்குனர்கள் அல்லது பாலிவுட் இயக்குனர்கள் இந்தியில் ரீமேக் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழக மக்களின் டேஸ்ட்டும், இந்தி மக்களின் டேஸ்ட்டும் ஒத்து வராது என்று நினைத்து இத்தனை ஆண்டுகள் ரீமேக் படங்கள் பண்ண பலர் தயங்கி வந்தனர்.
இந்நிலையில் நம்ம ஊர் முருகதாஸ் சூர்யாவை வைத்து கஜினி படத்தை எடுத்து கல்லா கட்டினார். பிறகு அதே கதையை எடுத்துக் கொண்டு பாலிவுட் போய் அங்கும் கல்லா கட்டினார். அதன் பிறகு கோலிவுட் படங்களை பாலிவுட்டில் ரீமேக் செய்வது அதிகரித்து வருகிறது.

முருகதாஸின் கஜினி
தமிழில் சூர்யாவை வைத்து எடுத்த கஜினி படத்தை முருகதாஸ் தானே இந்தியில் ரீமேக் செய்தார். அதில் ஆமீர் கானை நடிக்க வைத்து படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கினார். ஆமீர் கானுக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படங்களில் கஜினிக்கு முக்கிய இடம் உண்டு.

வாண்டட்
பிரபுதேவா தெலுங்கு படமான போக்கிரியை தமிழில் விஜயை வைத்து ரீமேக் செய்தார். படம் சூப்பரா ஓடியதும் அதை இந்தியில் சல்மான் கானை வைத்து ரீமேக் செய்தார். பிரபுதேவாவின் கண்ணை அவராலேயே நம்ப முடியவில்லை. படம் இந்தியிலும் ஹிட்டானது. டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவுக்கு இயக்குனர் பொறுப்பு கச்சிதமாகப் பொருந்தியது.

சிங்கம்
நம்ம ஹரியின் சிங்கம் படத்தை இந்தி இயக்குனர் ரோஹித் ஷெட்டி இந்தியில் ரீமேக் செய்தார். அஜ்ய தேவ்கன் சூர்யா கதாபாத்திரத்தில் நடித்தார். அனுஷ்கா கேரக்டரில் காஜல் அகர்வால் நடித்தார். காஜலின் முதல் இந்தி படமான சிங்கம் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

ரவுடி ராத்தோர்
சிவா இயக்கத்தில் கார்த்தி, தமண்ணா நடித்த சிறுத்தையை பிரபுதேவா இந்தியில் ரீமேக் செய்தார். அக்ஷய் குமார், சோனாக்ஷியை வைத்து எடுக்கப்பட்ட படம் வெற்றி பெற்றது. அக்ஷய் குமாருக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஹிட்டான படம் இது.


Click it and Unblock the Notifications











