அன்னையர் தினம்.. முதலமைச்சராக மகன் பதவியேற்பு.. விஜய் அம்மா செம ஹேப்பி.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க?
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றது. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லாததால் அடுத்த கட்சிகளின் ஆதரவுக்காக காத்திருக்கும் நிலை உருவானது. அக்கட்சிக்கு காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் ஆதரவு கொடுத்திருக்கிறார்க. எனவே பெரும்பான்மை கிடைத்திருப்பதால் இன்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்னும் சற்று நேரத்தில் முதலமைச்சராக பதவியேற்கவிருக்கிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த நான்காம் தேதி வெளியாகின. யாருமே எதிர்பார்க்காத வகையில் தவெக மொத்தம் 108 தொகுதிகளில் வென்றது. விஜய்யும் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் வென்றுவிட்டார். இருந்தாலும் ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும். அது இல்லாததால் மற்ற கட்சியினரின் எம்.எல்.ஏக்கள் ஆதரவை கேட்கும் நிலைமை உருவானது. எனவே பல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பலனாக காங்கிரஸ் கட்சி திமுகவுடனான உறவை முறித்துக்கொண்டு தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது.

அடுத்தடுத்து ஆதரவு: காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்தாலும் 118 என்ற நம்பரை தொட முடியவில்லை. எனவே விசிக, கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட கட்சிகளிடம் விடாமல் பேச்சுவார்த்தை நடந்தது. தவெகவுக்கு தங்களது ஆதரவை கொடுப்பதற்கு முதலில் யோசித்த அவர்கள்; நீண்ட யோசனைக்கு பிறகு தங்களது ஆதரவை கொடுத்துவிட்டார்கள். இவர்களோடு சேர்ந்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் ஆதரவு கொடுத்தது. இதன் காரணமாக ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு நேற்று ஆளுநரை சந்தித்தார்.
இன்று பதவியேற்பு: அதன்படி இன்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விஜய் முதலமைச்சராக பதவியேற்கிறார். இன்னும் சற்று நேரத்தில், சி ஜோசப் விஜய் எனும் நான் என அவர் சொல்வதை பார்ப்பதற்கு ரசிகர்களும், தொண்டர்களும் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு விஜய்யின் குடும்பத்தினர், திரிஷா மற்றும் அவரது அம்மா உமா கிருஷ்ணன் உள்ளிட்டோர் எல்லாம் கலந்துகொண்டிருக்கிறார்கள். மேலும் ஸ்ரீமன், நடிகை சங்கீதா, க்ரிஷ் உள்ளிட்டோரும் வந்திருக்கிறார்கள்.
ஷோபா பேட்டி: இந்நிலையில் பதவியேற்பு விழாவுக்கு செல்வதற்கு முன்பு விஜய்யின் தாய் ஷோபா ANI ஊடகத்திடம் பேசினார். அப்போது அவர், "எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்று அன்னையர் தினம். அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். இப்போது செல்வதற்கு எனக்கு தாமதமாகிவிட்டது. எனவே மீண்டும் சந்திப்போம்" என சொல்லிவிட்டு கிளம்பினார். மேலும் மகன் முதலமைச்சராக பதவியேற்கவிருப்பதால் அவரது முகம் முழுவதும் மகிழ்ச்சி ரேகைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications
