அவங்கள கேட்கிறீங்களே விஜய்.. நீங்க ஒயிட்லதான் சம்பளம் வாங்குனீங்களா?.. ப்ளூ சட்டை மாறன் அட்டாக்
சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இன்று வேலூரில் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் வழக்கம்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அட்டாக் செய்து பேசினார். மேலும் இப்போதுள்ள அரசியல்வாதிகள் அரசியலுக்கு வரும் முன்பு இருந்த சொத்து எவ்வளவு, வந்த பிறகு இருக்கும் சொத்து எவ்வளவு என சொல்ல முடியுமா என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார்.
வேலூரில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய நடிகரும், அக்கட்சியின் தலைவருமான விஜய், "நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை தமிழ்நாட்டுக்கும், NDAவுக்குமான தேர்தல் என சொல்கிறார்கள். இதில் என்ன லாஜிக் இருக்கிறது என புரியவில்லை. இந்தத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். நம் மக்கள் போல் ஒரு தெளிவான மக்களை எங்கேயும் பார்க்க முடியாது. அப்படி இருக்கையில் எதற்காக தேவையே இல்லாமல் உருட்டுகிறார்கள் என தெரியவில்லை.

மு.க.ஸ்டாலின் நண்பர்: தன்னை எதிர்ப்பவர்கள் எல்லாம் தன்னுடைய நண்பர்கள்தான் என ஸ்டாலின் சார் சொல்கிறார். அப்போ நானும் அவருக்கு நண்பர்தான். ஆனால் நண்பர் கூட்டம் போட அனுமதிகேட்டால் கொடுப்பதில்லை. உண்மையிலேயே இந்தத் தேர்தல் தமிழ்நாடு மக்களுக்கும், ஸ்டாலின் சாருக்கும் நடக்கின்ற போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கும் போர். இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர். இதற்கு நடுவில் என்.டி.ஏ, டெல்லி பற்றியெல்லாம் ஏன் பேசுகிறார்கள் என புரியவில்லை.
விஜய்தான் தமிழ்நாடு: தமிழ்நாடுதான் விஜய். விஜய்தான் தமிழ்நாடு. திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே நடந்துகொண்டிருக்கும் போருக்கு இடையே ஒன்றுக்கும் உதவாத பால் டப்பாவை உருட்டுகிறார். இந்த ஆட்சியில்தான் தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலமாக மாறிவிட்டதாம். இந்த உல்டா மாடல் ஆட்சியில் தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலமாக இல்லை. சூப்பர் ஸ்டாண்ட் அப் காமெடியன் நடத்தும் மாநிலமாக மாறியிருக்கிறது. அதுதான் உண்மை.
பல தடைகள்: உங்களுக்காகத்தான் நான் பலவிதமான தடைகள், சூழ்ச்சிகளையெல்லாம் தாண்டி உங்களை நம்பித்தான் தவெக 2026 தேர்தலில் தில்லாக நிற்கிறது. இதுவரைக்கும் நடந்த தேர்தல் வேறு. இப்போது நடக்கவிருக்கும் தேர்தல் வேறு. ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கும் நடக்கும் தேர்தலாக இதை நினைக்க வேண்டாம். இது 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் போல இது ஒரு அதிசயமான தேர்தல்.
வெளிப்படையாக சொல்ல முடியுமா?: இப்போதிருக்கும் அரசியல்வாதிகளிடம் ஒன்று கேட்கிறேன். நீங்கள் அரசியல் வருவதற்கு முன்பு உங்களிடம் இருந்த சொத்து எவ்வளவு? அரசியலுக்கு வந்த பிறகு இருக்கும் சொத்து எவ்வளவு? அதை உங்களால் வெளிப்படையாக சொல்ல முடியுமா? அந்த சொத்தெல்லாம் எப்படி வந்தது என்றும் கூற முடியுமா?" என பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு தவெகவினர் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தார்கள்.
ப்ளூ சட்டை மாறன் கேள்வி: இந்நிலையில் அரசியல்வாதிகளின் சொத்து குறித்த விஜய்யின் கேள்வியை குறிப்பிட்டு ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், "நியாயமான கேள்வி. அதேபோல் நீங்கள் நடித்த படங்களுக்கு சம்பளமாக முற்றிலும் ஒயிட் மணியில்தான் வாங்கினீர்களா? வாங்குகிறீர்களா?" என கேள்வி எழுப்பியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications