ஓடி ஓடி உதவி செய்யும் KPY பாலா.. இந்த முறை செய்த உதவி என்ன தெரியுமா?
சென்னை: இலவச ஆம்புலன்ஸ், புயல் நிவாரணம் என தேடி தேடி உதவி செய்யும் KPY பாலா இந்த முறை இலவச சுத்திகரிப்பு குடிநீர் நிலையத்தை அமைத்து கொடுத்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானவர் பாலா. ரைமிங் காமெடியால் ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்த இவருக்கு அடுத்தடுத்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெட்டுக்கிளி..வெட்டுக்கிளி என புகழுடன் இவர் செய்த அலப்பறை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் தொகுப்பாளராகவும் அவதாரம் எடுத்த பாலா, பல்வேறு இசைவெளியீட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன்மூலம் சம்பாதித்து வருகிறார். அதுமட்டுமின்றி சினிமாவிலும் பாலாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது. இப்படி பிசியாக இருக்கும் பாலா, தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பாலானவற்றை ஆதரவற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.
பாவா லட்சுமணனுக்கு உதவினார்: கடந்த சில மாதங்களுக்கு முன், மருத்துவமனையில் சிகிச்சை வந்த பாவா லட்சுமணனை நேரில் சந்தித்து ரூ.30 ஆயிரம் பணத்தை கொடுத்து உதவினார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பாவா லட்சுமணனிடம் சிறிது நேரம் மனம் விட்டு பேசி, என்னால் முடிந்த உதவியை செய்தேன் என்றார். இதையடுத்து, அறந்தாங்கி அருகே முதியோர் இல்லம் ஒன்றிற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்த பாலா, இதுவரை மக்களுக்காக தனது சொந்த செலவில் 4 இலவச ஆம்புலன்ஸை வாங்கி கொடுத்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் போன்ற ஊர்களில் மக்கள் வெள்ளத்தால் அவதிப்பட்ட நிலையில், அந்த மக்களை நேரில் சென்று சந்தித்து சுமார் 200 குடும்பத்திற்கு ரூ1000 கொடுத்து உதவினார்.
இலவச சுத்திகரிப்பு குடிநீர் நிலையம்: தற்போது பாலா, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கோட்டை கயப்பாக்கம் கிராமத்திற்கு இலவச சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் ஒன்றை அமைத்து கொடுத்து இருக்கிறார்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த பகுதியில்,சுகாதாரமற்ற குடிநீரை அருந்தியதால் பலருக்கு உடல் உபாதைகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால்,அப்பகுதி மக்கள் நடிகர் KPY பாலா அவர்களிடம் தங்கள் கிராமத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் ஒன்றை அமைத்திருமாறு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பாலா, மூன்று லட்ச ரூபாய் செலவு செய்து இந்த கிராம மக்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை அமைத்துகொடுத்துள்ளார். சிறு நடிகராக இருந்தாலும், பாலா செய்யும் தொடர் உதவிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











