வறுமையில் ஏங்கி தவித்த இளைஞர்.. மாறுவேடத்தில் தேடி வந்து உதவிய KPY பாலா!
சென்னை: பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் இளைஞருக்கு நடிகர் KPY பாலா பைக் ஒன்றை பரிசளித்து அவரை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வரும் நிலையில் பலரும் பாலாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் டிவி தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் நடிகர் பாலா, தற்போது இவர் சினிமாவிலும், சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். தனக்கே குறைவான வருமானம் வரும் போது அந்த வருமானத்தை வைத்துக்கொண்டு இலவச ஆம்புலன்ஸ் வழங்குவது, மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்குவது, ஏழைகளுக்கு உணவு அளிப்பது. இது மட்டுமில்லாமல் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தையும் நடத்தி வருகிறார் நடிகர் பாலா.

வருத்தப்பட்ட இளைஞன்: அண்மையில் சோஷியல் மீடியாவில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் இளைஞர் ஒருவர் பைக் இல்லை, ஒரு சைக்கிளுக்கு கூட வழியில்லை, வீட்ல பைக் வாங்க வேண்டும் என்று பத்தாயிரம் ரூபாய் கேட்டால் செருப்பால அடிப்பாங்க என்று பேசி இருந்தார். வறுமையில் விரக்தியில் அந்த இளைஞர் பேசியது இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ பாலாவின் கண்ணில் பட அந்த இளைஞர் வேலை செய்யம் பெட்ரோல் பங்கிற்கு மாறுவேடத்தில் சென்று, பெட்ரோல் போட்டுவிட்டு, அந்த இளைஞரின் கையில் பைக் சாவியை கொடுத்த அழகுப் பார்த்துள்ளார் பாலா.
லவ் யூ தம்பி: இந்த வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பாலா, இவரது வீடியோவை இன்ஸ்டாகிராமில் எதேச்சையாக பார்த்தேன். என்னால் என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வீடியோவில், என்னால் பைக் வாங்க முடியாது என்று கூறினார், ஆனால் அவருக்கு நான் ஒரு பைக்கை பரிசளிக்க முடியும் என என் மனம் சொன்னது. அதனால் என் தம்பிக்கு பரிசாக இந்த பைக்கைக் கொடுத்தேன். லவ் யூ தம்பி. ஏதோ என்னால் முடிஞ்சது எனப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பாலாவிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கஷ்டப்படும் இளைஞன்: பெட்ரோல் பங்கில் பகுதி நேரமாக வேலை செய்யும் அஜித்குமாரி, மேல்மருவத்தூரில் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். வாடகை வீட்டில் வசித்து வரும் இவரின் தந்தை, அஜித்குமாருக்கு 6 வயது இருக்கும் போதே, அம்மாவை தவிக்கவிட்டுவிட்டு எங்கோ சென்றுவிட்டாராம். அதன் பிறகு அவரது தாய் கூலிவேலை செய்து மகனை படிக்கவைத்துள்ளார். தற்போது குடும்பத்திற்காகவும், தனது தம்பியின் படிப்புக்காகவும் அஜித்குமார் பெட்ரோல் பங்கில் பகுதி நேரமாக வேலை பார்க்கிறார். இதை தெரிந்து கொண்டு தான் பாலா இந்த இளைஞருக்கு பைக்கை பரிசாக கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











