சாட்டிலைட் உரிமம் மட்டும் இத்தனை கோடியா? ரிலீசுக்கு முன்பே வசூல் வேட்டையில் கெத்து காட்டும் தி கோட்!
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தி கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மைக் மோகன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முக்கியமான காட்சிகளில் வருவது போல் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்ற தகவல் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
புதிய கீதை படத்திற்குப் பின்னர் யுவன் சங்கர் ராஜா விஜயின் கோட் படத்திற்கு இசையமைத்து வருகின்றார். இந்த படத்தின், முதல் பாடலான பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா பாடல் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த பாடல் கலவையான விமர்சனங்களை பெற்றது. சமீபத்தில் தி கோட் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்ற நிலையில் படத்தின் சி.ஜி பணிகளும் மிக வேகமாக நடைபெற்றது. அதே நேரத்தில் படத்தின் டப்பிங் பணிகளும் நிறைவேறி விட்டதாக தகவல்கள் வெளியாகியது.

சாட்டிலைட் உரிமம்: படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கும் நேரத்தில் புதிய அப்டேட் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அது கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டீவி, ரூபாய் 90 கோடிகளுக்கு வாங்கி உள்ளது என்ற தகவல் தான். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே ரூபாய் 90 கோடிக்கு வியாபாரம் ஆகிவிட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விஜய் ரசிகர்களுக்கு இந்த தகவல் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த படம்: இதற்கு முன்னர் வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக சுமாரான படம் எனப்பட்டாலும், வசூல் ரீதியாக படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறியது. இந்நிலையில் தனது 68வது படமான தி கோட் படத்திற்குப் பின்னர் 69வது படத்திற்கு விஜய் தயாராகி வருகின்றார். ஏற்கனவே கதை, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் யார் என்பது உறுதியாகிவிட்டது என்றும் இது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் பேச்சுகள் அடிபடுகின்றது.

விஜய் 50: வரும் 22 ஆம் தேதி தனது ஐம்பதாவது பிறந்தநாளை நடிகர் விஜய் கொண்டாடுகிறார். விஜயின் பிறந்தநாளில் தி கோட் படம் தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் அதாவது கடந்த பிப்ரவரி மாதத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். கட்சி தொடங்கிய பின்னர் நடிகர் விஜய் கொண்டாடும் முதல் பிறந்த நாள் என்பதால், இந்த பிறந்த நாளில் தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகளைச் செய்ய அவரது ரசிகர்களும் கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
சிறப்பு வழிபாடு: இந்நிலையில் நேற்று அதாவது ஜூன் மாதம் 13ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விஜயின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக நாமக்கல் வந்திருந்தார். அதன் பின்னர் நாமக்கல்லில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்தார்.


Click it and Unblock the Notifications











