Vijay: திடீரென விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட விஜய்.. கையில் இருந்தது என்ன?
சென்னை: டெல்லி சிபிஐ அலுவலகம் நாளை ஆஜராகும்படி விஜய்க்கு சம்மன் அனுப்பி இருக்கும் நிலையில், விசாரணைக்கு ஆஜராவதற்காக இன்று தனி விமானம் மூலம் டெல்லி செல்ல இருந்த நிலையில், விஜய் திடீரென விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஜனவரி 12ஆம் தேதி ஆஜரானார். அவரிடம் கிட்டதட்ட ஐந்து முதல் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

சிபிஐ விசாரணை: இதைத்தொடர்ந்து ஜனவரி 19ந்தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அன்றைய தினம் மீண்டும் அவர் ஆஜரானார். அன்றும் அவரிடம் ஆறு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தப்பட்டது. இரண்டு முறை விஜய் ஆஜரான போதும் சில கேள்விகளுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க அவரது தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதால், அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் மார்ச்15ந் தேதி ஆஜராகும்படி விஜய்க்கு சம்மன் அனுப்பியது.
கை பையில் கத்திரிக்கோல்: இந்த சம்மனை பெற்றுக் கொண்ட விஜய் நாளை விசாரணைக்கு ஆஜராவதற்காக இன்று பிற்பகல் நீலாங்கரை வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார். தனி விமானத்தில் அவர் டெல்லி செல்ல இருந்த நிலையில், விஜய் வைத்து இருந்த கை பையில் கத்திரிக்கோல் இருந்ததால், பைலட் விமானத்தை இயக்க முடியாது என கூறியதை அடுத்து விஜய் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து விஜய், தனது கை பையை சோதனை செய்வதற்காக பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு தனி விமானத்தில் அமர்ந்துள்ளார். அந்த சோதனை முடித்த பின் தான் தனிவிமானம் புறப்படும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











