தெறி ரீ ரிலீஸ் யாரு கேட்டா? கடுப்பில் இருந்த விஜய் ரசிகர்களை காப்பாற்றிய திரௌபதி 2
சென்னை: இயக்குநர் மோகன் ஜி நடிப்பில் உருவாகி உள்ள படம் திரௌபதி 2. இந்த படத்தில் ரிச்சர்ட், நட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். படம் வரும் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இப்படி இருக்கையில், 23ஆம் தேதி நடிகர் அஜித்தின் மங்காத்தா படம் ரீ ரிலீஸ் செய்யப்படும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துவிட்டது. அதேபோல் பொங்கலுக்கு விஜயின் தெறி படத்தை ரீ ரிலீஸ் செய்வதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்திருந்தார். அதன் பின்னர் சிறிய பட்ஜெட் மற்றும் புது பட தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று, ரீ ரிலீஸ் தேதியை மாற்றினார்.
அதன் பின்னர் ஜனவரி 23ஆம் தேதி படத்தின் ரீ ரிலீஸ் இருக்கும் என்று அறிவித்தார். அந்த தேதியில் திரௌபதி 2 படம் ரிலீஸ் ஆகவுள்ளதால், திரௌபதி 2 படக்குழுவினர் தெறி படத்தின் தயாரிப்பாளரைச் சந்தித்தும் சமூக வலைதளத்திலும் கோரிக்கை வைத்தனர். இதனால் மீண்டும் தெறி படத்தின் ரீ ரிலீஸ் தேதியை தாணு தள்ளி வைத்துள்ளார். இந்த தகவல் தற்போது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஜன நாயகன் படத்தின் ரிலீஸ்க்காக காத்துக் கொண்டு இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு, தெறி படத்தின் ரீ ரிலீஸ் என்பது தேவையற்றதாக உள்ளதாக பலரும் கருதுகிறார்கள். இப்படி இருக்கையில், தெறி படத்தை ரீ ரிலீஸ் செய்ய கலைப்புலி எஸ் தாணு முயற்சிப்பது விஜய் ரசிகர்கள் வரவேற்கவில்லை. இப்படி இருக்கும்போது தற்போது தெறி படத்தின் ரீ ரிலீஸை ஒத்தி வைக்க திரௌபதி 2 படக்குழு காரணமாக இருப்பதால் பலரும் திரௌபதி 2 படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.
கோரிக்கை: ஏற்கனவே தெறி ரீ ரிலீஸ் தேதியை மாற்றி வைக்க வேண்டும் என்று திரௌபதி 2 பட இயக்குநர் கோரிக்கை வைத்தார். அதற்கு கலைப்புலி தாணுவோ, “ புதிய இயக்குனர்கள், நல்ல படைப்புகள் மற்றும் வளரும் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதே V Creations நிறுவனத்தின் தலையாய பொறுப்பு. அந்த நோக்கத்தை முன்னிட்டு "தெறி" திரைப்படத்தின் வெளியீட்டின் முடிவு நாளை அறிவிக்கப்படும். நன்றி” என்று பதில் அளித்திருந்தார்.
நன்றி: இப்படி இருக்கையில், தெறி படத்தின் ரீ ரிலீஸ் தேதியை கலைப்புலி தாணு ஒத்திவைத்துள்ளார். இந்த முடிவை எடுத்த அவரை நேரில் சந்தித்து திரௌபதி 2 படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என இருவரும் நன்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில், “ எங்களின் வேண்டுகோளை ஏற்று தளபதி விஜய் சார் அவர்களின் தெறி திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்த கலைப்புலி தாணு சார் அவர்களுக்கு என் தயாரிப்பாளர் மற்றும் எங்கள் திரெளபதி2 திரைப்பட குழு சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











