ரசிகர்கள் பிரார்த்தனை பாதி நிறைவேறிவிட்டது: 'முதல்வன்' ஆகும் விஜய்?
Recommended Video
சென்னை: விஜய்யை வைத்து முதல்வன் 2 படத்தை எடுக்க இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா, ரகுவரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1999ம் நவம்பர் மாதம் 7ம் தேதி வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் முதல்வன்.
20 ஆண்டுகள் கழித்து அந்த வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம்.

ஷங்கர்
முதல்வன் 2 படத்தில் ரஜினிகாந்த் அல்லது கமல் ஹாஸனை நடிக்க வைக்கவே ஷங்கர் விரும்பினார். ஆனால் ரஜினி ஏற்கனவே கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார். மேலும் அரசியல் கட்சி துவங்கும் வேலையும் உள்ளது. அதனால் அவரை நடிக்க வைக்க முடியாதாம். கமல் ஹாஸன் ஏற்கனவே அரசியல் கட்சி துவங்கி பிசியாக உள்ளார். இந்தியன் 2 தான் நான் நடிக்கும் கடைசி படம் என்று கமல் ஏற்கனவே அறிவித்துவிட்டார். அதனால் அவரையும் முதல்வன் 2 படத்தில் நடிக்க வைக்க இயலாது.

விஜய்
கமல் ஹாஸனும், ரஜினிகாந்தும் பிசியாக இருப்பதால் முதல்வன் 2 படத்தில் நடிக்க விஜய்யுடன் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விஜய் நிச்சயம் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். விஜய் ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கான நண்பன் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரார்த்தனை
விஜய்யின் ஒவ்வொரு பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போதும் அவர் ரசிகர்கள் போஸ்டர்கள், பேனர்கள் வைப்பது வழக்கம். அதில் வருங்கால தமிழக முதல்வர் விஜய் அண்ணா என்று எழுதியிருப்பார்கள். ரசிகர்கள் விஜய்யை வருங்கால முதல்வர் என்று கூறி போஸ்டர் அடிப்பதில் தவறில்லை என்று எஸ்.ஏ. சந்திரசேகரும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விஜய் ரீல் முதல்வர் ஆகப் போகிறார். முதல்வன் 2 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கமல் ஹாஸன்
ஷங்கர் கமல் ஹாஸனை வைத்து இந்தியன் 2 படப்பிடிப்பை துவங்கினார். லோக் சபா தேர்தல் வந்ததால் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஷங்கரிடம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியான உடன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் கமல் ஹாஸனோ பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சென்றுவிட்டார். இந்தியன் 2 படத்தின் நிலை பற்றி ஒரு தகவலும் இல்லை. ஏற்கனவே இந்தியன் 2 கைவிடப்பட்டதாக இரண்டு முறை செய்திகள் வெளியானது. இந்நிலையில் ஷங்கர் முதல்வன் 2 படத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











