நம்பியவர்களை நடுத்தெருவில் விட்ட பழக்கம் விஜய்க்கு இல்லை.. ஜன நாயகன் தயாரிப்பாளருக்காக முடிவை மாற்றிய விஜய்
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி பெரிய எதிர்பார்ப்பில் இருந்த படம் ஜனநாயகன். ஏற்கனவே தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் படம் என்றாலும் படத்தின் இயக்குனரான ஹெச். வினோத், விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார் என்று படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி இருக்கையில் இந்த படம் சில தினங்களுக்கு முன்னர் லீக் ஆகி பெரும் அதிர்ச்சியை அனைவருக்கும் கொடுத்தது. ஜனநாயகன் தான் விஜயின் கடைசி படம் என்று இருந்த நிலையில் தற்போது அந்த படம் லீக் ஆகி உள்ளதால் இதனால் படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை ஈடு செய்ய விஜய் மிக முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட படம் ஜனநாயகன். முதலில் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய அறிவிப்புகள் வெளியாகி இருந்தாலும், அதன் பின்னர் படத்தை 2026 ஜனவரிக்கு ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டு பணியாற்றியது. இது விஜயின் கடைசி படம் என்று அறிவித்திருந்ததால் ரசிகர்கள் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்து நம்பி இருந்தனர்.
படத்திற்கான புக்கிங் எல்லாம் விறுவிறுப்பாக நடைபெற்று டிக்கெட்டுகள் எல்லாம் பெரும்பாலும் விற்றுத் தீர்ந்தது. ஆனால் படத்துக்கு ரிலீஸ் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட காலதாமதம் மற்றும் சட்ட சிக்கலால் படம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸ் ஆகவில்லை. இந்த பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதால் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதி செய்யப்படாமலேயே இருக்கிறது.

இப்படி இருக்கையில் ஜனநாயகன் படத்தை அடையாளம் தெரியாத நபர் சில தினங்களுக்கு முன்னர் இணையத்தில் சட்டவிரோதமாக லீக் செய்தார். இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறையினர் முதல் கட்டமாக ஆறு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தேகம்: ஒரு புறம் இதை படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் யாரோ தான் ரிலீஸ் செய்திருக்க வேண்டும் என்று இணையத்தில் குற்றம் சாட்டப்படுகிறது. அதே நேரத்தில் படத்தை லீக் செய்வதற்கு பின்னணியில் பாஜகவும் திமுகவும் இருக்கிறது என்று விஜயின் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், விஜய் ரசிகர்கள் கூறுகின்றனர். தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலின் சார்பில் இந்த தவறை யார் செய்திருந்தாலும் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். ஒரு முழு படமே இவ்வளவு தரமான HD பிரிண்டில் லீக் ஆகிறது என்றால் தயாரிப்பாளர்கள் எப்படி பணம் போட்டு படம் எடுக்க முன் வருவார்கள் என்று மாநில, மத்திய அரசுகளை நோக்கி கேள்வி எழுப்பினர்.

தயாரிப்பாளருக்காக: இப்படி இருக்கையில் தென்னிந்திய திரையுலகில் இருந்து பலரும் இது தொடர்பாக கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில் நடிகர் விஜய் தவிர படக்குழுவினர் அனைவரும் கண்டனம் தெரிவித்துவிட்டனர். ஆனால் விஜய் இதுவரை எதுவும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார். இந்நிலையில் படம் லீக் ஆனதால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய விஜய் ஒரு முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ஜனநாயகன் படத்தை தயாரித்த கே வி என் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படத்தில் நடித்துக் கொடுக்க விஜய் முடிவு செய்திருப்பதாகவும், அந்தப் படமே விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என்றும், அந்தப் படத்தை விஜய்யின் அபிமான இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ், அட்லி அல்லது நெல்சன் திலீப்குமார் என இவர்கள் மூவரில் யாராவது இயக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தீர்க்கமான முடிவு: இந்த படமே விஜயின் கடைசி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் விஜய் இந்த முடிவை எடுக்க காரணம் ஜனநாயகன் லீக் ஆனதால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது, தன்னை நம்பி வந்த தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட கூடாது என்பதால் விஜய் இன்னொரு படத்தில் நடித்துக் கொடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் எப்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











