விஜய் - திரிஷா பற்றி நயினார் நாகேந்திரனின் அநாகரீக பேச்சு.. திரைத்துறையில் இருந்து வந்த முதல் எதிர்ப்பு
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யையும், நடிகை திரிஷாவையும் இணைத்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அநாகரீகமாக பேசியிருப்பது பெரும் கண்டனத்தை சம்பாதித்திருக்கிறது. பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரனேகூட அவரது இந்தப் பேச்சை கண்டித்திருக்கிறார். இந்நிலையில் திரைத்துறையிலிருந்து முதல் எதிர்ப்பு வந்திருக்கிறது.
பாஜக மாநில தலைவரான நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது விஜய்யையும், திரிஷாவையும் இணைத்து வைத்து அநாகரீகமாக பேசினார். அவரது இந்தப் பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகிறார்கள். கட்சி பாகுபாடின்றி அனைவருமே தங்களது கண்டன குரலை பதிவு செய்தாலும் திரைத்துறையிலிருந்து சத்தமே இல்லாமல் இருந்துவந்தது. இந்நிலையில் பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் முதல் ஆளாக தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்.
ஜேம்ஸ் வசந்தன் பதிவு: அவர் தனது முகநூல் பக்கத்தில், "நயினார் நாகேந்திரன் அடிப்படையில் பண்பானவர்தான். தவறாகப் பேசக்கூடிய ஆளில்லை. ஆனால் அவர் சேர்ந்திருப்பது ஒரு அசிங்கக் கூடாரம். அது இப்படித்தான் மாற்றும் யாரையும். பன்றியோடு கன்று சேரும்போது, பன்றி வைக்கோல் தின்னக் கற்பதில்லை; கன்றுதான் "அதை" தின்னக் கற்கும் என்பது ஊர்மொழி. விஜய்யை அரசியல் ரீதியாக எதிர்க்கத் துணிவின்றி அவரது தனிப்பட்ட வாழ்க்கையைக் கொச்சையாகப் பேசுவது கொஞ்சம்கூட ஏற்புடையதல்ல. இதை ஒருத்தன் கூட ஒத்துக்கொள்ள மாட்டான்.

மன்னிப்பு கேட்டுவிடுங்கள்: அப்படிப் பார்த்தால், எல்லா அரசியல் தலைவர்களின் வாழ்க்கையையும் விமர்சிக்க முடியுமே. பிரம்மச்சாரி என்று காட்டிக்கொள்கிற மோதி அடிக்காத கொட்டமா? அது உங்களுக்கும் தெரியும். அதுவா அரசியல்? பேசாமல் மன்னிப்பு கேட்டுவிடுங்கள். அதுதான் உங்களுக்கும் நல்லது; தமிழ்நாட்டு அரசியலுக்கும் நல்லது. நீங்கள் கடைநிலைத் தொண்டனில்லை, எதையாவது பேசிவிட்டு அப்படியே செல்வதற்கு. நீங்கள் ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர். நீங்கள் மன்னிப்புக் கேட்டுத்தான் ஆகவேண்டும். அதில் வேறு பேச்சுக்கே இடமில்லை" என குறிப்பிட்டிருக்கிறார்.
தொடர்ந்து இழுக்கப்படும் திரிஷா: முன்னதாக விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததிலிருந்தே அவரை விமர்சிக்கிறேன் என்கிற பெயரில் நடிகை திரிஷாவையும் தொடர்ந்து அவதூறாக பேசிவருகிறார்கள். இதற்கு பெரும்பாலும் திரிஷா ரியாக்ட் செய்துகொள்வதில்லை. ஆனால் இனிமேலும் அவர் இப்படி இருக்கக்கூடாது; இப்படி பேசுபவர்களுக்கு எதிராக சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் இவர்கள் எல்லாம் அடங்குவார்கள் என்று அவரது ரசிகர்கள் கொந்தளித்துவருகிறார்கள்.
விஜய்யும், திரிஷாவும் இணைந்து நடித்த படங்கள்: விஜய்யும் திரிஷாவும் இதுவரை கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி, லியோ ஆகிய படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். கோட் படத்தில் விஜய்யுடன் அவர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பேரும் நல்ல நண்பர்கள் என்பது திரைத்துறையில் அனைவருமே அறிந்ததுதான். ஆனால் அந்த நட்பை தவறான நோக்கத்துடன் புரிந்துகொண்டு பேசுவது ஆரோக்கியமானது இல்லை.


Click it and Unblock the Notifications











