SK உடன் மோத முடிவெடுக்க இதுதான் காரணம்.. விஜய் டிவி பாலா ஓபனா சொல்லிட்டாருப்பா!
சென்னை: வரும் செப்டம்பர் 5ஆம் தேதி, நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி படம் ரிலீஸ் ஆகவுள்ளது. சிவகார்த்திகேயன் படம் வந்தாலே, தியேட்டர் ஓனர்களுக்கு மகிழ்ச்சி. காரணம் அவரது படத்தை ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து பார்ப்பார்கள் என்பதுதான். ஆனால் மதராஸி படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று தெரியவில்லை.
இப்படி இருக்கும்போது, மதராஸி படம் வெளியாகும் அதே தினத்தில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு புகழ் பாலா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படமான காந்தி கண்ணாடி படமும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டு உள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் படத்தின் இயக்குநர் ஷெரிஃப் மற்றும் நாயகன் பாலாவை நோக்கி, செப்டம்பர் 5ஆம் தேதி சிவகார்த்திகேயன் படம் வெளியாகிறது. அப்படி இருக்கும்போது சிவகார்த்திகேயன் படத்திற்கு எதிராக நீங்கள் களமிறங்குகிறீர்களே என்று கேள்வி எழுப்பட்டது.

அதற்கு முதலில் பதில் அளித்த படத்தின் இயக்குநர் ஷெரிஃப், படத்தை நாங்கள் சொன்ன தேதியில் எடுத்து முடித்து விட்டோம். படத்தை எப்போது ரிலீஸ் செய்யலாம் என்று ஒரு நாள் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கும் போது, படத்தின் தயாரிப்பாளர் செப்டம்பர் 5ஆம் தேதியைக் குறிப்பிட்டார். நானும் விளையாட்டுக் சொல்கிறார் என்று நினைத்து சரி என்று சொல்லிவிட்டேன். ஆனால் படத்தை விரைவில் ரிலீஸ்க்கு கொண்டு வரவேண்டும் என்ற நெருக்கடி தயாரிப்பாளருக்கு உள்ளது. இது மட்டும் இல்லாமல், ஓடிடி ரிலீஸ் தேதியை மனதில் வைத்துதான் நாங்கள் இந்த தேதிக்கு சரி என சம்மதித்தோம்.
பாலா ரியாக்ஷன்: சிவகார்த்திகேயன் அண்ணனின் படத்திற்கு எதிராக வரவேண்டும் என்று எல்லாம் எங்களுக்கு எண்ணம் இல்லை. பாலாவிடம் தேதியைச் சொன்னதும் வடிவேலுவைப் போல பதறிவிட்டார். சிவகார்த்திகேயன் அண்ணனின் படத்தை பார்க்க வருபவர்கள் அதற்கு டிக்கெட் இல்லை எனும்போது வேறு என்ன படம் ஓடுகிறது என்று எங்கள் படத்திற்கு வருவார்களா என்ற எண்ணத்தில்தான் இந்த தேதியை முடிவு செய்தோம் என்று சொல்லி சமாதானப்படுத்தினேன் என்று கூறினார்.

பாலா பதில்: அடுத்து பாலா பேசுகையில், இயக்குநர் இப்போது என்ன சொன்னாரோ அதைச் சொல்லித்தான் என்னை ஒத்துக் கொள்ள வைத்தார்கள். சிவா அண்ணன் படம் எவ்வளவு பெரிய படம். அந்த படத்துடன் என் படம் மோதுமா? அண்ணன் படம் கட்டாயம் ஹிட் அடித்து விடும். எங்கள் படமும் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது" என்று பேசினார். இவரது இந்த பதில் திரைத்துறையில் வேகமாக பரவி வருகிறது.
ஸ்டார்களை உருவாக்கும் விஜய் டிவி: விஜய் தொலைக்காட்சியில் சின்னத்திரை பிரபலங்களாக இருந்து வெள்ளித்திரையில் கதாநாயகர்களாக , கதாநாயகிகளாக ஜொலித்து வருகிறார்கள். வரும் தீபாவளிக்கு கவினின் கிஸ் படம் வெளியாகவுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் அமரன், கவினின் பெக்கர் படங்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. பாலாவின் காந்தியின் கண்ணாடி படத்தின் டிரைலர் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கமெண்ட் செக்ஷனை நிரப்பி வருகிறார்கள். படம் வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











