Bigg Boss: கமலுக்கு அடுத்து விஜய் சேதுபதியா? நயன்தாராவா? இன்று மாலை தெரிஞ்சுடும்.. ரசிகர்களே தயாரா?
சென்னை: தமிழில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பெரும்பான்மையான ரசிகர்களை கொண்ட ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக் பாஸ் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது எட்டாவது சீசனுக்கு விஜய் டீவியும் பிக் பாஸ் ரசிகர்களும் தயாராகி வருகின்றனர். ஏற்கனவே உலகநாயகன் கமல் ஹாசன் தான் பிக்பாஸ் போட்டியை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகுவதாக கூறினார்.
கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார் என்ற காரணத்திற்காகவே ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கத் தொடங்கினர். இப்போது கமல்ஹாசன் இல்லை எனும்போது, ரசிகர்கள் மத்தியில் அடுத்து யார் என்ற கேள்வி எழுந்தது. பிக்பாஸ் சீசன் 8ஐ கமல் ஹாசனுக்குப் பதிலாக யார் தொகுத்து வழங்குகின்றார்கள் என்பதை விஜய் டீவி தரப்பில் இருந்து அறிவிக்கவுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை விஜய் டீவி நிர்வாகமே வெளியிட்டுள்ளது.

தொடக்கத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு இருப்பதைப் போலத் தெரியவில்லை. ஆனால் முதல் சீசன் முடியும்போது ஒரு அரசியல் கட்சித் தலைவர், பொது மேடையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு விழும் வாக்கு எனக்கு விழுந்தால் தமிழ்நாட்டின் முதலமச்சராகி இருப்பேன் எனத் தெரிவித்தார். அதேபோல், நாளடைவில் போட்டியாளர்கள் தங்களைப் போன்ற குணாதிசயம் கொண்டவர்களாக உள்ளனர் என போட்டியாளர்களுக்காக சமூக வலைதளங்களில் அடித்துக் கொள்ளும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகும் அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் தமிழ்நாட்டில் அதிகரித்தனர்.
சினிமாவில் கலக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற பல போட்டியாளர்கள் இன்றைக்கு சினிமா உலகில் சிறப்பாகவே செயல் பட்டு வருகின்றனர். உதாரணத்திற்கு, ஹரிஷ் கல்யாண், கவின், ஆரோவ், தர்ஷன், ஆரி, பாலா உள்ளிட்ட பலர் பிக்பாஸ் மூலம் தங்களுக்கான இடத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளனர்.
கமல்ஹாசன்: வழக்கமாக ஒரு சீசன் என்றால் அந்த சீசனில் இளம் வயதில் இருந்து மூத்த வயதினர் வரையிலான போட்டியாளர்கள் இருப்பார்கள். இதில் இளம் வயதில் இருப்பவர்கள் நெருங்கி பேசுவதையும் அல்லது அதிகமாக ஒன்று கூடி பேசுவதையும் ரசிகர்கள் காதல் என்று சமூக வலைதளங்களிலும் பொதுவெளிகளிலும் பேசுவார்கள். இது மட்டும் இல்லாமல் வீட்டுக்குள் யாராவது சர்ச்சைக்குரிய நபர்களாக இருந்தால் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். இவர்களை எல்லாம் தனது ஒற்றைச் சொல்லுக்கு கட்டுப்படுத்தும் வல்லமையை கொண்டவராக கமல்ஹாசன் விளங்கினார்.
விஜய் சேதுபதி: அதனால்தான் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது பார்ப்பவர்களுக்கும் நிகழ்ச்சி மீது நம்பகத்தன்மை ஏற்பட்டது. இப்படியான நிலையில் கமல்ஹாசன் இல்லை எனும்போது, இனி யார் அவருக்கு பதிலாக தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி இப்போது வரைக்கும் தீவிரமான பிக் பாஸ் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சிலர் நடிகர் விஜய் சேதுபதிதான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார் என கூறுகின்றனர். சிலர் எஸ்.டி.ஆர் சிம்புதான் பிக் பாஸ் சீசன் 8இன் தொகுப்பாளர் என கூறுகின்றனர். ஒரு சிலரோ நடிகை நயன்தாராதான் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என கூறுகின்றனர்.
எதிர் பாராததை எதிர் பாருங்கள்: ரசிகர்கள் மத்தியில் பேச்சு இப்படி இருக்கும்போது, இன்று அதாவது செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிக் பாஸ் சீசன் 8இன் தொகுப்பாளர் யார் என்பது குறித்து விஜய் டீவி சார்பில் தெரிவிக்கவுள்ளனர். பெரும்பாலானோர் நடிகர் விஜய் சேதுபதிதான் எனக் கூறினாலும், எதிர் பாராததை எதிர் பாருங்கள் என்ற ஸ்டைலில் இயங்கி வரும் பிக் பாஸ் டீம், யாரைத் தேர்வு செய்துள்ளது என்பது குறித்து இன்று மாலை 6 மணிக்கு தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications