எங்கிருந்து வருது இந்த புத்தி.. மடை மாறும் மணிமேகலை - பிரியங்கா விவகாரம்.. கிழியும் முகத்திரை!
சென்னை: இணையத்திற்குள் நுழைந்தாலே, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்த செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளது. இதனை செய்திகள் எனக் கூறுவதைக் காட்டிலும் கருத்துக்கள், கருத்துத் திணிப்புகள், இதுதான் வாய்ப்பு என நினைத்து தங்களது ஆற்றாமையை வெளிப்படுத்தும் செயல்களைப் பார்க்க முடிகின்றது. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்தப் பிரச்னையை ஒரு குரூப் திட்டமிட்டே வேறு திசைக்கு திசை திருப்பிக் கொண்டு உள்ளது. அது இந்த தமிழ் நாட்டில் இருக்கக் கூடிய ஒற்றுமையை கொஞ்சம் அசைத்துப் பார்த்து அதில் குளிர்காய நினைக்கும் விஷமிகள் முயற்சிகள்.
முதலில் மணிமேகலை மூலமாகத்தான் பிரச்னை வெளியில் தெரிந்தது. மணிமேகலை வெளியிட்ட அறிக்கையில், பிரியங்காவின் பெயரைக் குறிப்பிடாமல், தனக்கு நடந்தது, தனது சுயமரியதையை சீண்டிப் பார்க்கும் செயல் எனக் கூறி, நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டார். அதன் பின்னர் ஒரு வீடியோவும் வெளியிட்டுவிட்டார். மணிமேகலையும் நடந்த விஷயத்தை தனது பார்வையில் இருந்து கூறியுள்ளார். இதற்கு இன்னும் பிரியங்கா தரப்பில் இருந்து எந்தவிதமான ரியாக்ஷனோ, பதிலோ வரவில்லை. பிரியங்கா எதாவது பதில் கொடுப்பாரா என பலரும் இப்போதுவரை காத்துக் கொண்டு உள்ளனர்.

இப்படியான நிலையில், பலரும் மணிமேகலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் மணிமேகலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்கள் யாரும், விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 5இல் இருந்தவர்கள் இல்லை. அதேநேரத்தில் விஜய் டிவியில் தற்போது பணியாற்றிக் கொண்டு இருப்பவர்களும் இல்லை. பிரச்னை வெளியே தெரிந்த சில நாட்களில் கருத்து தெரிவித்தவர்கள் அனைவரும் மணிமேகலைக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்தனர்.

விஜய் டிவி பிரபலங்கள்: மா.கா.ப. ஆனந்த், புகழ் உள்ளிட்டோர் இது அவர்களின் தனிப்பட்ட பிரச்னை, அதில் நாம் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. என்ன நடந்தது எனத் தெரியாமல் பலரும் பலவிதமாக பேசி வருகின்றார்கள் என கூறினர். சில தினங்களுக்கு முன்னர், இந்த பிரச்னை தொடர்பாக வீடியோ வெளியிட்ட குரேஷி, பிரியங்கா மீது தவறு எதுவும் இல்லை எனக் கூறினார். இதுமட்டும் இல்லாமல், மணிமேகலை கொஞ்சம் நிதானமாக செயல்பட்டு இருந்தால் பிரச்னையே வந்திருக்காது எனக் கூறினார். அதேபோல் பிரியங்காவைப் பற்றித் தெரியாமல் நீங்களாக அவர் மீது தவறான பிம்பத்தை கட்டமைக்க வேண்டாம் எனக் கூறியும் வருகின்றனர்.

ஆதரவு: விஜய் டிவியில் பிரியங்கா தொகுத்து வழங்கும், வழங்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களை பலர் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கின்றனர். அவர்களும் பிரியங்காவுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் ரசிகர்களாக இருக்ககூடிய பிரபலங்கள் மணிமேகலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படி மணிமேகலைக்கு ஆதரவாகவும், பிரியங்காவுக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஷமிகள்: இப்படியான நிலையில் இணையவாசிகளில் ஒரு குரூப், பிரச்னையை முற்றிலுமாக திசை திருப்பி அதன் மூலம் குளிர் காய நினைக்கின்றனர். குறிப்பாக மணிமேகலை தமிழ் பொண்ணு, பிரியங்காவின் முழுபெயர் பிரியங்கா தேஷ்பாண்டே. பாண்டே என்பது அவரது சாதியின் பெயர். தமிழ் மண்ணுக்கு அந்நியமான இனத்தினைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டிற்கு பிழைப்புக்காக வந்தவர்கள், இன்றைக்கு தமிழ் பொண்ணான மணிமேகலைக்கு குடைச்சல் கொடுத்துள்ளார். பார்த்தீர்களா வந்தேறிகளின் ஆதிக்கத்தை? எல்லா துறைகளிலும் தமிழர்கள் நசுக்கப்படுகின்றார்கள். எனவே நாம் அனைவரும் தமிழச்சி மணிமேகலையின் பக்கம் நிற்கவேண்டும் என விஷமத்தனமான கருத்தை பரப்பி வருகின்றனர்.

சலசலப்பு: இந்த பிரச்னையை இவ்வாறாக திசை திருப்புவதால் ஏற்படும் சலசலப்பின் மூலம் ஆதாயம் தேட நினைக்கின்றது அந்த கோஷ்டி. ஆனால், ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல் ஒற்றுமையின் அடையாளமாக உள்ள தமிழ் மண்ணில் விஷமிகளின் செயல்பாடுகளால் சலசலப்புகள்தான் ஏற்படுமே தவிர, பெரிய அலைகளோ சுனாமியோ என்றைக்கும் உருவாக வாய்ப்பில்லை. அப்படியான சூழல் உருவாக வாய்ப்புள்ளது என்ற நிலை ஏற்படும்போது, ஒரு சமூகமாகவே இந்த தமிழ்நாடு விஷமிகளையும் அவர்களின் கருத்துகளையும் புறக்கணிக்க தயாராகவே இருக்கும். உண்மையில் யார் பக்கம் நியாயம் உள்ளதோ, அவர்களுக்கு ஆதரவாக கருத்து சொல்வதில் தவறில்லை. ஆனால் அதனை வேறு ஒரு பிரச்னையாக பரிணமிக்க வைக்கும் படியாக பிரச்னையை திசை திருப்புவது என்ன மாதிரியான மனநிலை என கேள்வி கேட்க வைக்கின்றது. பிரச்னையை இரு இனங்களுக்கு இடையில் பகையை வளர்க்கும் வகையில் திசை திருப்ப நினைப்பவர்களுக்கு ஒன்று மட்டும் சொல்லாம், "உங்கள் பருப்பு இங்கு வேகாது.. இது தமிழ்நாடு" அவ்வளவே.



Click it and Unblock the Notifications











