பிக்பாஸில் பொதுமக்களும் பங்கேற்கலாம்..எப்படி விண்ணப்பிப்பது?
பிக்பாஸ் சீசன் 6 தொடங்க உள்ள நிலையில் அதில் பொதுமக்களும் பங்கேற்கும் வாய்ப்பை விஜய் டெலிவிஷன் வழங்க உள்ளது.
Recommended Video
பிக்பாஸ் சீசன் -6 விரைவில் தொடங்க உள்ளது. பலருடைய வாழ்க்கைப் பாதையை மாற்றிய பிக்பாஸ் தற்போது பொதுமக்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க வாய்ப்பை வழங்குவதற்கான சில நடைமுறைகளை விஜய் டெலிவிஷன் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி
அமெரிக்க தொலைக்காட்சிகளில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் நூறுநாள் அவர்கள் அவர்களாகவே ஒரு வீட்டிற்குள் அடைக்கப்பட்டு பின்னர் அவர்களுடைய நடவடிக்கைகள் அங்குள்ள கேமராக்கள் மூலம் பொதுமக்கள் காண ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பை பெற்றதை அடுத்து இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை சோனி நிறுவனம் நடத்தத் தொடங்கியது. இந்த நிகழ்ச்சி 15 வது சீசனாக நடக்கிறது. இந்தியில் சல்மான் கான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதேபோன்று தமிழிலும் விஜய் தொலைக்காட்சி நிறுவனம், எண்டோஸ்மால் நிறுவனம் இணைந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடங்கி ஐந்து சீசன்கள் நடத்தி முடித்து விட்டனர்.

பிக்பாஸ் 6 வது சீசன் தொடங்க உள்ளது
தற்போது 6 வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை சீசன் ஒன்று முதல் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து நடத்தி வருகிறார். கமல்ஹாசன் நிகழ்ச்சியை நடத்துவதால் பிக் பாஸ் நிகழ்ச்சி பொதுமக்களிடையே பெரிய அளவில் சென்று சேர்ந்தது. வாரத்தில் இரண்டு நாட்கள் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது அவர் பேசும் வார்த்தைகள், சொல்கின்ற விஷயங்களுக்காக ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. இதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் மிகவும் பிரபலம் அடைந்துள்ளனர்.

உலகமே உங்களை இனி உற்று நோக்கும்
பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று செல்பவர்களிடம் கமல்ஹாசன் "இதற்கு முன் நீங்கள் எப்படி இருந்தீர்கள் தெரியாது இந்த தளத்திற்கு வந்து சென்றபின் உலகமே உங்களை உற்று நோக்குகிறது, இதற்குப் பின் உங்களுக்கு ஒரு புது வாழ்க்கை அமையப் போகிறது" என்று சொல்லி அனுப்புவார். அதே போல் பலருக்கும் புது வாழ்க்கை அமைந்தது. பிக்பாஸ் மூலமே பலர் கதாநாயகர்களாக, கதாநாயகிகளாக தமிழ் திரையுலகில் கால் பதித்தனர். இது தவிர பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் விளம்பர படங்களில் நடிப்பதிலும், விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி களில் தொடர்ந்து பங்கேற்பதன் மூலம் அவர்கள் வாழ்க்கைக்கு ஒரு நிலையான வருமானம் கிடைத்து வருகிறது.

பிக்பாஸ் பலருடைய வாழ்க்கையை மாற்றியுள்ளது
எந்த வகையில் பார்த்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் முன்னேற்றமான ஒரு நிகழ்ச்சி என்று சொல்லலாம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஒவ்வொருவரும் ஆவலாக பல ஆண்டுகள் காத்திருப்பதும் உண்டு. மொத்தத்தில் பார்த்தால் பிக்பாஸில் பங்கேற்பதற்கு பல முன்னணி பிரபலங்கள் ஆர்வமாய் இருப்பதையே பல நிகழ்ச்சிகளில் அவர்கள் பேட்டி மூலம் தெரிந்து உள்ளோம். பிக் பாஸ் சீசன் 5 நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் தாமரை உள்ளிட்டோர் கலந்துகொண்டு பிரபலமானார்கள். எங்கோ கடைகோடியில் தெருக்கூத்து கலைஞராக இருந்த தாமரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் இன்று உலகம் முழுவதும் மிகப் பிரபலமான பெண்ணாக இருந்து வருகிறார்.

பொதுமக்களுக்கும் இம்முறை வாய்ப்பு
இதுபோன்ற சிறப்பு வாய்ந்த பிக் பாஸ் சீசன் 6 தற்போது தொடங்கப்பட உள்ளது. இதற்காக பங்கேற்கும் பிரபலங்களிடம் விஜய் டிவி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதே நேரம் பிக்பாஸில் இந்த தடவை புதுமையான முயற்சியாக பொதுமக்களையும் பங்கேற்க வைக்கலாம் என்கிற ஒரு முடிவுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வந்துள்ளனர். அதனால் பொதுமக்கள் பங்கேற்பதற்கான வாய்ப்பை வழங்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை இன்று விஜய் டெலிவிஷன் வெளியிட்டுள்ளது. இதன்படி பிக்பாஸ் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் தங்களுடைய சுய குறிப்போடு கூடிய ஒரு காணொளி காட்சியை (self taped video) பதிவு செய்து அவர்கள் குறிப்பிட்டுள்ள தளத்திற்கு சென்று பதிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது?
அந்த லிங்க் இந்த செய்தியில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ( vijay.startv.com )அதில் சென்று உங்கள் சுய தகவல்களை அவர்கள் கூறும் பரிந்துரைப்படி பதிவு செய்யவும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பலரும் ஆர்வமாக இருப்பார்கள். குறிப்பாக வளர்ந்து வரும் கலைஞர்கள், திரைத் துறையில் கால்பதிக்க எண்ணுபவர்கள், கமல்ஹாசன் ரசிகர்கள் என பலதரப்பட்ட மக்கள் தங்களை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முயற்சிப்பார்கள். எனவே லட்சக்கணக்கில் குவியும் விண்ணப்பங்களில் இருந்து குறிப்பிட்ட சிலரை விஜய் தொலைக்காட்சி நிறுவனம் எப்படி தேர்வு செய்யப் போகிறது என்பது மிக ஆச்சரியமான விஷயம். பொதுமக்களாகிய நீங்கள் இதில் பங்கேற்க விரும்பினால் உங்களுடைய சுய காணொளியை கேட்கப்பட்டுள்ள விவரக் குறிப்பின்படி அனுப்பி வைக்கவும். சொல்ல முடியாது வாய்ப்பு இருந்தால் நீங்களும் ஒரு பிக்பாஸ் கண்டஸ்டன்டாக மாறவும் வாய்ப்புள்ளது. https://vijay.startv.com/BigBoss/Index


Click it and Unblock the Notifications











