பாரதி கண்ணம்மாவின் அடுத்த அத்தியாயம்.. கலக்கல் காம்போவுடன் களமிறங்கும் டீம்!
சென்னை : விஜய் டிவியின் கலக்கல் தொடராக வலம்வந்த பாரதி கண்ணம்மா தன்னுடைய முதல் சீசனை கடந்த சனிக்கிழமை முடித்துள்ளது.
இதையடுத்து உடனடியாக சீரியலின் அடுத்த சீசன் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கலக்கல் ப்ரமோவும் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று முதல் பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடர் துவங்கவுள்ளது. இதில் பாரதியாக பிரபல சீரியல் நடிகர் சிபு சூரியன் தோன்றுகிறார்.

விஜய் டிவி சீரியல்கள்
விஜய் டிவியின் முன்னணி தொடர்களாக பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா மற்றும் பாண்டியன் ஸ்டோஸ் காணப்படுகிறது. இந்தத் தொடர்களுடன் ஈரமான ரோஜாவே 2, தமிழும் சரஸ்வதியும் உள்ளிட்ட தொடர்களும் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களுடன் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன.

பாரதி கண்ணம்மா தொடர்
இந்நிலையில் அருண், ரோஷினியுடன் ஒளிபரப்பாகிவந்த பாரதி கண்ணம்மா தொடர் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது. இடையில், நடிகை ரோஷினி இந்தத் தொடரிலிருந்து விலகிய நிலையில், சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களுக்கு சலிப்பை கொடுத்தது. இதனால் சீரியல் எப்போது நிறைவடையும் என்று கேட்கும் அளவிற்கு ஆனது.

நிறைவு பெற்ற பாரதி கண்ணம்மா தொடர்
இந்நிலையில் இந்த சீரியல் கடந்த சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்திருந்த பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும், மீண்டும் திருமணம் செய்துக் கொள்வதாக இந்தத் தொடர் நிறைவு பெற்றுள்ளது. கலக்கலாக மற்ற சீரியல் நடிகர்கள், நடிகைகள், பிரபலங்கள் பங்கேற்க இந்த தொடர் நிறைவு பெற்றுள்ளது.

பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடர்
பாரதி கண்ணம்மாவின் முதல் பாகம் நிறைவு பெறுவதற்கு முன்னதாகவே அடுத்த சீசனுக்கான ப்ரமோவை சீரியல் குழு வெளியிட்டது. இந்த புதிய சீசனில் சன் டிவியின் ரோஜா சீரியல் புகழ் சிபு சூரியன் நாயகனாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக வினுஷாவே கண்ணம்மாவாக நடிக்கவுள்ளார்.

சீரியல் ப்ரமோ
இந்த சீரியலின் தற்போதைய ப்ரமோ ரசிகர்களை மிகுந்த உற்சாகப்படுத்தியுள்ளது. பாரதியாக சிபு சூரியன் நடிக்கவுள்ளதும் சீரியலுக்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. மற்றபடி பாரதியின் அம்மாவாக நடித்த சவுந்தர்யாவே இந்த சீரியலிலும் அம்மாவாக நடிக்கவுள்ளார். கண்ணம்மாவின் அம்மாவாக பிரபல நடிகை தீபா களமிறங்கியுள்ளார்.

ரசிகர்கள் ஆர்வம்
பாரதி -கண்ணம்மா தொடரில் காதலையும், சூழ்ச்சியையும், கணவன் -மனைவி உறவு மற்றும் சந்தேகத்தால் அவர்களின் வாழ்க்கை திசை மாறுவதையும் கதைக்களமாக கொண்டு ரசிகர்களை கவர்ந்திருந்தார் இயக்குநர். இந்நிலையில், இந்த புதிய சீசனில் எந்த மாதிரியான கதைக்களம் இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











