Bigboss :பிக்பாஸ் சீசன் 7க்கான வேலைகளை துவங்கிய விஜய் டிவி.. விரைவில் அறிவிப்பு!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியாகவும் முதன்மையான நிகழ்ச்சியாகவும் உள்ள பிக்பாஸ் இதுவரை 6 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது இந்த நிகழ்ச்சியின் சிறப்பாக பார்க்கப்பட்டது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை மட்டும் சில வாரங்கள் நடிகர் சிம்பு தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஜூன் மாதத்தில் துவங்கும் பிக்பாஸ் சீசன் 7? : விஜய் டிவியின் நம்பர் ஒன் நிகழ்ச்சியாக ரசிகர்களை கடந்த சில ஆண்டுகளாக வெகுவாக கவர்ந்து வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். ஒரே வீட்டில் ஒன்றாக இருக்கும் பலதரப்பட்ட மனநிலைகளை கொண்டவர்கள், எப்படி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள், சண்டையிடுகிறார்கள், தோழமை பாராட்டுகிறார்கள், ஒன்றாக சேர்ந்து விளையாடுகிறார்கள் என்பது போன்ற பல விஷயங்களை இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.
இதுவரை பிக்பாஸ் 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி துவங்கப்பட்ட நிலையில், அந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். ஆனால் இடையில், தன்னுடைய படத்தின் சூட்டிங்கிற்காக அவர் நிகழ்ச்சியிலிருந்து விலகினார். இதையடுத்து சில வாரங்கள் நடிகர் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டத்தின் உச்சமாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் தற்போது திரையில் அதிகமான வாய்ப்புகளை பெற்று ஜொலித்து வருகின்றனர். சிலருக்கு எந்தவிதமான வெளிச்சத்தையும் கொடுக்கவில்லை. இதனிடையே, இந்த நிகழ்ச்சியின் கடந்த சீசனின் வெற்றியாளராக அசீம் தேர்வு செய்யப்பட்டார். இந்த முடிவு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அவரிடமிருந்து டைட்டிலை திரும்பப் பெற வேண்டும் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

இதனிடையே அடுத்த சீசனுக்கு இந்த நிகழ்ச்சி தற்போது தயாராகி வருகிறது. கடந்த சீசன் அக்டோபர் மாதத்தில் துவங்கி ஜனவரியில்தான் நிறைவடைந்தது. இந்நிலையில் நிகழ்ச்சியின் 7வது சீசன் அடுத்த மாதமே துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்கனவே துவக்கிவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தன்னுடைய வீட்டை காட்டிலும் அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அறியும் மனித இயல்பின் அடிப்படையில் உருவாகியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி, எதிர்பார்த்ததை காட்டிலும் மிகவும் அதிகமான வரவேற்பை தொடர்ந்து பெற்று வருகிறது. ஒவ்வொரு சீசனிலும் நட்பு, காதல், துரோகம், மகிழ்ச்சி, சிரிப்பு, விளையாட்டு, போட்டிகள், அழுகை, துயரம் என பல்வேறு உணர்ச்சிகளை இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தொடர்ந்து நிகழ்ச்சியில் கொடுத்து ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











