Baakiyalakshmi: ஸ்வீட் காரம் காபி பட பாணியில் மாமியார், மகளுடன் ரோட் ட்ரிப்பிற்கு தயாராகும் பாக்கியா
சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடரான பாக்கியலட்சுமியில் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றன.
கடந்த சில வாரங்களாக தொய்வடைந்திருந்த இந்தத் தொடர் அடுத்தடுத்த பரபரப்பான கட்டங்களை காட்சிப்படுத்தி வருகிறது.
ஸ்வீட், காரம் காபி பட பாணியில் மாமியார் மற்றும் மகளுடன் கேரளாவிற்கு ரோட் ட்ரிப் போக தயாராகிறார் பாக்கியா.

பாக்கியலட்சுமி தொடரில் மாமியார், மகளுடன் ரோட் ட்ரிப்பிற்கு தயாரான பாக்கியா: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடரான பாக்கியலட்சுமி கடந்த இரு வாரங்களாக தன்னுடைய முதலிடத்தை இழந்த போதிலும் தற்போது அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை கொடுத்து ரசிகர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறது. பாக்கியா கல்லூரியில் சேர்ந்து படிப்பதை ரசிகர்கள் ஊக்குவித்தாலும், கோபி உள்ளிட்டவர்களின் எந்தவிதமான தலையீடும் இல்லாமல் நகர்ந்த சில எபிசோட்களால் தொடர் இழுவையாக மாறியது. அடுத்தடுத்து ஒரே மாதிரியான காட்சிகள் ரசிகர்களை டென்ஷன் செய்தது.
இதனால் தன்னுடைய முதலிடத்தை சேனலின் சிறகடிக்க ஆசை தொடரிடம் விட்டுக் கொடுத்து, பரிதாபமாக முழித்தது பாக்கியலட்சுமி தொடர். இதையடுத்து உடனடியாக சுதாரித்துக் கொண்டார் சீரியல் இயக்குநர். உடனே, சீரியலில் அடுத்தடுத்த சுவாரஸ்யங்களை இணைத்து, தொடரின் டிஆர்பி புள்ளிகளை கூட்டும் நடவடிக்கைகளை கடந்த சில தினங்களாக மேற்கொண்டு வருகிறார். கேன்டீன் கான்டிராக்ட் கைநழுவும் சூழல் வந்தபோது, பாக்கியா, கதறியதை பார்த்த ரசிகர்கள் மிகுந்த வேதனையை உணர்ந்தனர். தங்களது குடும்பத்திற்கு வந்த சோதனையாக அதை பார்த்தனர்.
பழனிச்சாமியின் அறிவுரையால் அதிலிருந்து மீண்ட பாக்கியா, அதற்கான காரணங்களை ஆராய்ந்து, தன்னை அதிகமாக என்கேஜ் செய்ததன் விளைவே இந்த பிரச்சினை என்பதை உணர்ந்தார். தொடர்ந்து ஆங்கில வகுப்பிலிருந்து விலகும் முடிவை எடுத்தார். இதையடுத்து உடனடியாக ஒரு கொண்டாட்டமும் சீரியலில் அரங்கேறியது. ஜெனியின் வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. அதன் பின்விளைவாக, மாலினியும் செழியனும் நெருக்கமாக மாறியதையும் பார்க்க முடிந்தது.
இந்நிலையில் ராதிகாவின் மகள் மயூ, பெரிய மனுஷியாக, அதனால் இனியாவுடன் கோபி செல்லவிருந்த ரோட் ட்ரிப்பை கேன்சல் செய்யும் நிலை உருவாகிறது. தன்னுடைய கல்லூரி முதல்வரிடம் இதற்கான பர்மிஷனை பெற்றதால், அந்த ட்ரிப்பை கேன்சல் செய்ய முடியாத சூழலில், இனியா பரிதவிக்கிறார். தன்னுடைய மகளின் இந்த இக்கட்டான சூழலில் கைக்கொடுக்க உடனே ஓடி வருகிறார் பாக்கியா. தானே தன்னுடைய மகளை ரோட் ட்ரிப்பிற்கு கூட்டி செல்ல முடிவெடுக்கிறார்.

கூடவே பாதுகாப்பிற்காக ஈஸ்வரி, செல்வியும் இந்தப் பயணத்தில் இணைகின்றனர். பெண்கள் நால்வரும் இணைந்து கேரள பயணத்தை மேற்கொள்ள திட்டமிடுகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான லட்சுமி, மதுபாலா உள்ளிட்டவர்கள் நடித்திருந்த ஸ்வீட் காரம் காபி படத்தின் கதையை இந்த நிகழ்வு தற்போது நினைவுப்படுத்துகிறது. தன்னுடைய மாமியார் மற்றும் மகளுடன் மதுபாலா அந்தப் படத்தில் காரிலேயே பயணம் மேற்கொள்வார்.
அதேபோல தற்போது தன்னுடைய மாமியார் ஈஸ்வரி, மகள் இனியா மற்றும் செல்வியுடன் பாக்கியா, கேரளாவின் ரோட் ட்ரிப்பை மேற்கொள்ளவுள்ளார். இனியாவின் ப்ராஜெக்ட்டிற்கான இந்தப் பயணம் பல சுவாரஸ்யங்களை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பாண்டிச்சேரிக்கு சமையல் கான்டிராக்ட் நிமித்தம் தன்னுடைய குழுவினருடன் சென்று சக்சஸ் காட்டினார் பாக்கியா. அதேபோல இந்த கேரள பயணமும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்


Click it and Unblock the Notifications











