Baakiyalakshmi: நான்தான் பாக்கியாவை கல்லூரிக்கு அனுப்பினேன்.. ஈஸ்வரி பேச்சால் பாக்கியா அதிர்ச்சி!
சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடரான பாக்கியலட்சுமி சேனலின் முக்கியமான தொடராக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
கடந்த சில வாரங்களாக சிறப்பான பல எபிசோட்களை இந்தத் தொடர் ஒளிபரப்பி வந்த நிலையில், கடந்த சில தினங்களாக கல்லூரியில் பாக்கியா சேர்ந்த நிகழ்வை சுற்றியே ஒளிபரப்பாகி வருகிறது.

இதனால் டிஆர்பியில் சரிவை சந்தித்து தன்னுடைய முதலிடத்தை விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடரிடம் விட்டுக் கொடுத்துள்ளது பாக்கியலட்சுமி தொடர்.
பாக்கியலட்சுமி புதிய எபிசோடால் ரசிகர்கள் உற்சாகம்: விஜய் டிவியின் முன்னணி தொடராக தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி தொடர். கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பல பரபரப்பான எபிசோட்களை கொடுத்து, ரசிகர்களை கட்டிப் போட்டது. ஆனால் இந்த வார அர்பன் கேட்டகரியில் சரிவை சந்தித்து சேனலின் சிறகடிக்க ஆசை தொடரிடம் தன்னுடைய முதலிடத்தை விட்டுக் கொடுத்துள்ளது. தற்போது பாக்கியலட்சுமி தொடரில் தன்னுடைய மகள் இனியாவின் கல்லூரியில் பாக்கியா படிப்பதற்காக இணைந்துள்ளார்.
மேலும் காசிக்கு போய் திரும்பிய ஈஸ்வரி, ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவராக உள்ளதும் அடுத்தடுத்த எபிசோட்களில் காட்டப்பட்டு வருகிறது. அவரை சமாளிக்க முடியாமல் குடும்பத்தினர் தவிப்பதும் காட்டப்படுகிறது. எப்போதுமே குடும்பத்தினர் இடையே டெரராக இருப்பார் ஈஸ்வரி. அவர் என்ன சொல்வாரோ என்று தொடர்ந்து பாக்கியா பயப்படுவதும் காணப்படும். ஆனால் தற்போது தன்னுடைய மாமியாரை சமாளிக்கும் எளிதான வழியை கண்டுப்பிடித்துள்ளார் பாக்கியா.
இதற்கும் பழனிச்சாமிதான் காரணமாக உள்ளார். அவர் கொடுத்த ஐடியாவால்தான், தான் கல்லூரியில் இணைந்ததை தன்னுடைய மாமியார் ஏற்கும்படி செய்கிறார் பாக்கியா. பழனிச்சாமி கொடுத்த ஐடியாபடி, ஈஸ்வரி குறித்து, தன்னுடைய மாமியார், தனக்கு எல்லாவகையிலும் உதவியாக, உறுதுணையாக இருப்பதாக வீடியோ பதிவிடுகிறார் பாக்கியா. இதைப்பார்த்து மகிழும் ஈஸ்வரி, தன்னுடைய மருமகள் கல்லூரிக்கு போவதற்கு சம்மதம் தெரிவிக்கிறார். அவரும் பாக்கியாவை பாராட்டி பதில் வீடியோவை பகிர்கிறார்.
இன்றைய எபிசோடில் கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் பாக்கியா, தன்னுடைய கல்லூரியில், ஈஸ்வரி குறித்து அனைவரும் பாராட்டியதாக கூறுகிறார். இதைக்கேட்டு மகிழ்ச்சியடையும் ஈஸ்வரி, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், தான் எதையும் பெரிதாக செய்துவிடவில்லை என்று கூறுகிறார். இதையடுத்து, ஈஸ்வரியை சமாளிக்கும் வித்தையை பாக்கியா கற்றுவிட்டதாக குடும்பத்தினர் அனைவரும் பாராட்டுகின்றனர்.

இதனிடையே கோயிலுக்கு தன்னுடைய மாமியாருடன் பாக்கியா செல்கிறார். அங்கு பார்ப்பவர்கள் அனைவரும் ஈஸ்வரிக்கு தொடர்ந்து பாராட்டு தெரிவிக்கின்றனர். இந்த வயதில் தன்னுடைய மருமகளை கல்லூரிக்கு அனுப்பி வைத்த ஈஸ்வரிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. இதனால் திக்குமுக்காடிப் போன ஈஸ்வரி, தன்னுடைய மருமகள் பாக்கியா, கல்லூரிக்கு போக மாட்டேன் என்றுதான் கூறியதாகவும் தான்தான் வற்புறுத்தி அவரை கல்லூரிக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறுகிறார். இதனால் பாக்கியா அதிர்ச்சியடைகிறார்.
தன்னுடைய அம்மா, பாக்கியாவின் கல்லூரி சேர்க்கைக்கு எதிராகத்தான் நடந்துக் கொள்வார் என்று எதிர்பார்த்து காத்திருந்த கோபிக்கு இந்த வீடியோக்கள் அதிர்ச்சியை அளிக்கின்றன. இதையடுத்து பாக்கியா தொடர்ந்து கல்லூரிக்கு போவது உறுதியாகிறது. இந்த வீடியோக்கள் குறித்து தன்னுடைய மனைவி ராதிகா என்ன சொல்வாரோ என்று அச்சத்தில் தன்னுடைய நண்பனிடம் புலம்புகிறார். இதுவே அவருக்கு குடிப்பதற்கு ஒரு காரணமாக அமைவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











