பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: காபி கொடுத்த ராஜி.. பாண்டியன் ஆத்திரம்.. பயத்தில் காபியை கீழே கொட்டிய ராஜி!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் இன்றைய எபிசோடும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. ஹோம் டியூஷன் விவகாரம் வீட்டிற்கு தெரியவந்து மிகப்பெரிய களேபரம் நடந்துள்ள நிலையில், ராஜி மற்றும் மீனாவிடம் குடும்பத்தினர் அனைவரும் தொடர்ந்து கோபத்தை காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் குடும்பத்தினர் அனைவரிடமும் கலகலப்பாக இருந்து வந்த ராஜி மற்றும் மீனா இருவரும் தாங்கள் ஒதுக்கப்படுவதை நினைத்து மிகப்பெரிய வருத்தமும் சங்கடமும் கொள்கின்றனர். ஆனாலும் தொடர்ந்து கோமதி உள்ளிட்டவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். மீனா, ராஜி இருவரும் நடந்த அனைத்திற்கும் மன்னிப்பு கேட்கும் நிலையிலும் யாரும் அவர்களை மன்னிக்க தயாராக இல்லை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்துள்ளது. கதிருக்கு சப்போர்ட் செய்யும் வகையில் ராஜி ஹோம் டியூஷன் எடுத்தநிலையில் இந்த விவகாரம் அவரது சித்தப்பா சக்திவேல் மூலமாக அனைவருக்கும் தெரியவருகிறது. இதனால் வீட்டிற்கு வாழ வந்த பெண்ணை வேலைக்கு அனுப்பி அதில் சாப்பிடுகிறாயா என்று பாண்டியனை அவர் கேலவமாக பேசுகிறார். இதனால் பதில் பேச முடியாமல் வாயடைத்து போகிறார் பாண்டியன். அவருக்கு இந்த விஷயம் மிகப்பெரிய மன உளைச்சலை கொடுக்கிறது. தன்னுடைய அப்பாவிற்கு நேர்ந்த இந்த அவமானத்திற்கு செந்தில், கதிர் உள்ளிட்டவர்களும் கொதிக்கின்றனர்.

மீனாவிடம் ராஜி அழுகை: இதையடுத்து ராஜிக்கு வடிவு கொடுத்த நகைகள் குறித்தும் தெரியவர முத்துவேல் இதற்காக பாண்டியனை மேலும் அசிங்கப்படுத்துகிறார். இதையடுத்து அந்த நகைகளையும் பாண்டியன் திருப்பி கொடுக்கிறார். இந்நிலையில் இதற்கு காரணமான ராஜி மற்றும் அவருக்கு சப்போர்ட் செய்த மீனா இருவரையும் குடும்பத்தினர் அனைவரும் திட்டித் தீர்க்கின்றனர். அவர்களிடம் பேசாமல் ஒதுக்கி வைக்கின்றனர். ராஜி மற்றும் மீனாவிடம் கதிர் மற்றும் செந்திலும் பேசாமல் கடுமையாக நடந்துக் கொள்கின்றனர். தான் செய்த தவறுக்கு மீனாவும் சேர்ந்து கஷ்டப்படுவதை நினைத்து ராஜி இன்றைய எபிசோடில் மீனாவிடம் அழுது தீர்க்கிறார்.
காபியை வாங்க மறுத்த பாண்டியன்: தொடர்ந்து மீனா அவரை சமாதானப்படுத்துவதாக காணப்பட்டது. இந்நிலையில், மறுநாள் காலையில் வாக்கிங் சென்றுவிட்டு வரும் பாண்டியனுக்கு ராஜி, காபி எடுத்துச் சென்று கொடுக்கிறார். ஆனால் அவர் அதை வாங்க மறுக்கிறார். ஆத்திரத்துடன் தன்னுடைய மனைவி கோமதியை அவர் அழைக்க, பயத்தில் ராஜி காபியை கீழே கொட்டுகிறார். இதனிடையே கோமதியிடம் பாண்டியன் கோபத்தில் கத்துவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இந்நிலையில் ராஜியிடம் பேசும் மீனா, தொடர்ந்து இதேபோல குடும்பத்தினர் இருப்பது சரிப்பட்டு வராது என்று கூறுகிறார்.

தங்கமயில் சமாதானம்: தொடர்ந்து கோமதியிடம் சென்று அவர் இதேபோல பேசாமல் இருந்தால், தாங்கள் வீட்டைவிட்டு வெளியேறி ஹாஸ்டலில் தங்கிக் கொள்கிறோம் என்றும் பேசாமல் இருப்பது வலிப்பதாகவும் கூறுகிறார். இதையடுத்து கோமதியிடம் பேசும் தங்கமயில் அவர்கள் தெரியாமல் செய்த தவறை வீட்டின் மூத்தவராக கோமதி மன்னிக்க வேண்டும் என்று கூறுகிறார். மீனா மற்றும் ராஜியிடம் முன்பை போலவே கோமதி அன்னியோன்னியமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறார். ஒரே வீட்டில் இருந்துக் கொண்டு இப்படி ஒருவருக்கொருவர் முகம்கொடுத்து பேசாமல் இருப்பதை சுட்டிக் காட்டுகிறார்.

கோபம் தணிந்த கோமதி: இதையடுத்து கோமதி சமாதானமடைந்து ராஜி, மீனாவிடம் பேசுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே, கோமதி, ராஜி மற்றும் மீனா தொடர்ந்து ஒற்றுமையாக இருப்பது குறித்து தங்கமயில் கோபப்பட்டதை சுட்டிக் காட்டிய அரசி, தற்போது அவர்களை சேர்த்து வைத்ததை பாராட்டி, தங்கமயில் நல்லவரா அல்லது கெட்டவரா என்று கேட்பதாக இன்றைய எபிசோட் நிறைவடைந்துள்ளது. இதற்கு தான் அடிப்படையில் நல்லவள்தான் ஆனால் ராஜி மற்றும் மீனாவிற்கு தான் கெட்டவளாக தெரிவதாக தங்கமயில் கூறுவதாகவும் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











