Thamizhum Saraswathiyum: சபதத்தை மீறி கம்பெனிக்கு செல்லும் அர்ஜூன்.. மல்லுக்கு நிற்கும் தமிழ்!
சென்னை: விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் தொடர் அடுத்தடுத்த பல சுவாரஸ்யங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.
இந்தத் தொடரின் எலெக்ஷன் எபிசோட்கள் மிகவும் பரபரப்பாக அமைந்தது. குறிப்பாக ரிசல்ட் அறிவிக்கப்பட்ட எபிசோட்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது.

இந்நிலையில் தற்போது எலெக்ஷனில் வெற்றி பெற்று தலைவராக தமிழ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். தொடர்ந்து அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.
தமிழும் சரஸ்வதியும் தொடரில் அடுத்தடுத்த பரபரப்புகள்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களின் பட்டியல் அவ்வப்போது வெளியாகி அந்த சீரியல்கள் எப்படி ரசிகர்களை கவர்ந்து வருகிறது என்பதை உணர்த்தி வருகின்றன. அந்த வகையில் அந்த சேனலின் தமிழும் சரஸ்வதியும் தொடர் முன்னணி சீரியல்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளது. இந்தத் தொடரில் சில எபிசோட்களுக்கு முன்னதாக தமிழ் மற்றும் அவரது அம்மா கோதை இருவரும் அசோசியேஷன் தேர்தலில் மோதும் சூழல் உருவானது.

தமிழை எப்படியாவது தோற்கடிக்க செய்து, அவரை இந்த தொழிலை விட்டே துரத்த வேண்டும் என்று அவரது தங்கையின் கணவர் அர்ஜூன் கங்கணம் கட்டியிருந்தார். அதற்காக பல்வேறு சதித்திட்டங்களையும் தமிழின் தம்பியுடன் இணைந்து அரங்கேற்றினார். அதன் ஒரு பகுதியாக, தமிழ் செய்யாத குற்றத்தை பெரிதாக்கி, அதை வைத்து தமிழை எலெக்ஷனில் தோற்கடிக்க செய்யவும் முயற்சி மேற்கொண்டார். ஆனால் கடைசி நேரத்தில் தமிழின் அப்பாவின் வீடியோவால் தமிழ் வெற்றியை பெற முடிந்தது.
முன்னதாக இந்த எலெக்ஷனில் தோற்றால் தமிழ் இந்த தொழிலைவிட்டே வெளியேற வேண்டும் என்று அர்ஜூனும், கோதை இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைவிட்டு அர்ஜூன் வெளியேற வேண்டும் என்று தமிழும் சபதமிட்ட நிலையில், தற்போது தமிழ் எலெக்ஷனில் வெற்றி பெற்றதையடுத்து அர்ஜூன் கோதை இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்குள் செல்லக்கூடாது என்று எச்சரிக்கிறார் தமிழ். அவரது சதித்திட்டங்களை முறியடிக்கவே தமிழ் அப்படி கூறுகிறார்.

ஆனால் சொன்னது போல செய்ய வேண்டிய அவசியம் இல்லை என அர்ஜூன் நிறுவனத்திற்குள் செல்ல முயற்சிக்கிறார். இதையடுத்து அர்ஜூனை, தமிழ் மிரட்டுகிறார். சபதத்தில் சொன்னதுபோல அவர் கோதை இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று அவர் எச்சரிக்கிறார். இதையடுத்து அந்த இடத்தில் இருந்து வெளியேறும் அர்ஜூன், மீண்டும் அடுத்த நாளே நிறுவனத்திற்குள் செல்ல முயற்சிக்கிறார். இந்த விஷயத்தை கேள்வியுறும் தமிழ், மீண்டும் வந்து அர்ஜூனை நிறுவனத்திற்குள் செல்லக்கூடாது என்று எச்சரிக்கிறார்.
இந்த முறை அவர்கள் இருவரும் சண்டையிடும் போதே, அங்கு தமிழின் அம்மா கோதை மற்றும் அப்பா இருவரும் வருகின்றனர். இதனால் அர்ஜூன் தனக்கு சப்போர்ட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் தமிழின் நண்பர் நமச்சு, கோதையிடம் நடந்ததை கூறுகிறார். இந்த விஷயத்தை கேட்கும் கோதை என்ன சொல்வதென்று தெரியாமல் யோசிப்பதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது. எப்போதும் நியாயமான விஷயங்களை செய்யும் கோதை, இந்த விஷயத்தில் தமிழுக்கு சப்போர்ட் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











