Vijay: "யார்ரா அந்த GOAT ஹேர் ஸ்டைலிஸ்ட்.." விஜய்யின் செல்ஃபியை பார்த்து காண்டான ரசிகர்கள்!
சென்னை: விஜய்யின் GOAT படப்பிடிப்பு அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அப்போது விஜய் ரசிகர்களை சந்தித்த வீடியோ வைரலானது. இந்நிலையில், தற்போது ரசிகர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட செஃல்பி இணையத்தை கலங்கடித்து வருகிறது.
வைரலாகும் விஜய்யின் நியூ செல்ஃபி
விஜய்யின் 68வது படமாக உருவாகி வருகிறது GOAT எனப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகும் இதில் விஜய் இரண்டு கேரக்டர்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் வெளியான போஸ்டரிலும் விஜய்யின் வித்தியாசமான லுக் ரசிகர்களின் கவனம் ஈர்த்திருந்தது.

இந்நிலையில், GOAT படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில், விஜய் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார் வெங்கட் பிரபு. அப்போது விஜய்யை பார்க்க ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்கள் குவிந்தனர். இதனையடுத்து ரசிகர்களை படப்பிடிப்புத் தளத்தின் உள்ளே இருந்தே பார்த்து கையசைத்தார் விஜய். ரசிகர்களை விஜய் சந்தித்த வீடியோ வைரலாகி வந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்ஃபி வைரலாகி வருகிறது. அதில் விஜய் மீசை இல்லாமல் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் இருப்பதை பார்த்து அவரது ரசிகர்களே அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த செல்ஃபியில் வகுடு எடுத்து வித்தியாசமான ஹேர்ஸ்டைல் லுக்கில் இருக்கிறார் விஜய். ப்ரெண்ட்ஸ் திரைப்படம் வரை தனது ஹேர் ஸ்டைல், லுக் என எதையும் மாற்றாமல் நடித்து வந்தார் விஜய்.
ப்ரெண்ட்ஸ் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் மட்டும் தான் விஜய் வித்தியாசமாக ஹேர்ஸ்டைல் வைத்திருந்தார். அதன்பின்னரும் பல வருடங்களாக ஹேர்ஸ்டலை மாற்றாமல் இருந்த விஜய், பீஸ்ட், வாரிசு, லியோ படங்களில் கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருந்தார். இந்நிலையில், இப்போது வெளியான விஜய்யின் செல்ஃபியை பார்த்து ரசிகர்கள் காண்டாகிவிட்டனர். சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இந்த போட்டோவை பார்த்து, "யார்ரா அந்த ஹேர் ஸ்டைலிஸ்ட்" என வசைபாடி வருகின்றனர்.
GOAT என்ற தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் மைக் மோகன், டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, இவானா, யோகி பாபு, பிரேம்ஜி, ஜெயராம், வைபவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 13ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம். விரைவில் GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











