Vijay Vs Ajith: இந்த கேரக்டரில் நான் நடிக்கிறேன்... விஜய்க்கு விட்டுக் கொடுக்க மறுத்த அஜித்!
சென்னை: விஜய் - அஜித் இருவருமே கோலிவுட்டின் டாப் ஹீரோக்களாக வலம் வருகின்றனர்.
இருவருமே ஒரே காலக்கட்டத்தில் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் மட்டுமே விஜய்யும் அஜித்தும் இணைந்து நடித்துள்ளனர்.
இந்நிலையில், இன்னொரு படத்திலும் இருவரும் இணைந்து நடிக்கவிருந்ததாகவும், ஆனால் அஜித் தான் இதனை மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் - அஜித் பிளாஷ்பேக்:எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் வரிசையில் கோலிவுட்டின் அடுத்த டாப் ஹீரோக்கள் என்றால் அது விஜய்யும் அஜித்தும் தான். கோலிவுட்டில் இருவருக்குமே பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். விஜய் - அஜித் படங்கள் ஒரேநாளில் வெளியானால், அது தரமான சம்பவமாக இருக்கும். அதேநேரம் திரையுலகில் அறிமுகமான புதிதில் விஜய்யும் அஜித்தும் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1995ம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் விஜய்யும் அஜித்தும் இணைந்து நடித்துள்ளனர். அதன்பிறகு இருவருமே முன்னணி நடிகராக மாறிவிட்டதால், சேர்ந்து நடிக்கவே இல்லை. சினிமாவில் இருவருக்கும் இடையே கடும் போட்டி இருந்தாலும், நிஜத்தில் நல்ல நண்பர்களாகவே வலம் வருகின்றனர். சமீபத்தில் கூட அஜித் அப்பாவின் மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார் விஜய்.
இந்நிலையில், ராஜாவின் பார்வையிலே-க்குப் பிறகு விஜய்யும் அஜித்தும் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவிருந்தார்களாம். 1999ம் ஆண்டு ரிலீஸான நீ வருவாய் என திரைப்படம் தான் அது. அஜித், பார்த்திபன், தேவயானி, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை ராஜகுமாரன் இயக்கியிருந்தார், சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்பி செளத்ரி தயாரித்தார்.

முன்னதாக நீ வருவாய் என படத்தின் கதையை விஜய்யிடமும் கூறியிருந்தாராம் இயக்குநர் ராஜகுமாரன். அதன்படி, பார்த்திபன் நடித்த கேரக்டரில் முதலில் விஜய் தான் நடிக்க இருந்துள்ளார். ஆனால் அப்போது அவர் பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருந்ததால் கெஸ்ட் ரோலில் வேண்டுமானால் நடிக்கிறேன் எனக் கூறினாராம். ஆனால் அதற்கு முன்பே அந்த கேரக்டரில் நடிக்க அஜித் கமிட் ஆகியுள்ளார்.
அதனால் அஜித்திடம் சென்ற ராஜகுமாரன், அவரிடம் மெயின் ரோலில் நடிக்க முடியுமா எனக் கேட்டுள்ளார். மேலும், விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார். ஆனால், அதற்கு முடியவே முடியாது என மறுத்துவிட்ட அஜித், நடித்தால் கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன் எனக் கூறிவிட்டாராம். அதன் காரணமாகவே நீ வருவாய் என படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போனதாம். இந்த உண்மையை 23 வருடங்கள் கழித்து இயக்குநர் ராஜகுமாரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











