Vijay: திமுக மண்ணைக் கவ்வ போவது உறுதி .. கண்டன பதிவில் சினிமா டயலாக்கை இறக்கிய விஜய்
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவருமான விஜய் தனது அரசியல் கட்சியைத் தொடங்கி, முதல் மாநாட்டை நடத்தியதில் இருந்து திமுகவைத்தான் காட்டமாக விமர்சித்து வருகிறார். தொடக்கத்தில் காட்டமாக விமர்சித்துக் கொண்டு இருந்தாலும், ஒரு கட்டத்தில் அதாவது இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து திமுகவை தீயசக்தி என்று எல்லாம் விமர்சிக்கத் தொடங்கிவிட்டார். ஏற்கனவே, " ரெண்டு பேருக்கு நடுவுலதான் போட்டியே.. ஒன்னு திமுக.. இன்னொன்னு தவெக" என தனது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை உற்சாகப்படுத்திக் கொண்டு இருந்தார் விஜய்.
அதன் பின்னர்தான் திமுக ஒரு தீய சக்தி என்றும் தவெக ஒரு தூய சக்தி என்றும் ஒரு நேரேட்டிவ் தனது ரசிகர்கள் மத்தியில் உருவாக்கினார். இப்படி இருக்கும்போது, தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், அண்மையில் தவெகவுக்கு ஆதரவாக சில பெண்கள் பேசிய பேச்சு பலருக்கும் அதிர்ச்சி கொடுத்த நிலையில், அது தொடர்பாக பொன்ராஜ் தெரிவித்த மிகவும் காட்டமான விமர்சனம் பலருக்கும் ஷாக் கொடுத்தது.

தவெகவுக்கு ஆதரவாக பேசும் சில பெண்கள் அறியாமையில் பேசுகிறார்கள், விஜய் என்ற நடிகரின் மீதான பிரியத்தில் அரசியல் தெளிவில்லாமல் பேசுகிறார்கள் என்று தெரிவித்திருந்தால் அது பெரிய பேசு பொருளாக மாறி இருக்காது. ஆனால் அவர் மிகவும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்தார். தமிழ்நாடு அரசியல் களத்தில் மாற்றுக் கட்சியினரை இதுவரை யாரும் விமர்சிக்காத வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.
கண்டித்த விஜய்: இந்நிலையில் இதைக் கண்டித்து நடிகர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளார். அதில், " இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராக செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சினிமா டயலாக்: த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி" என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த போஸ்ட்டுக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தாலும், நெட்டிசன்கள் விஜய் என்னங்க சினிமா டயலாக் எல்லாம் சேர்த்து திமுகவை விமர்சித்து வருகிறார் என்றும் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











