அய்யயோ மறுபடி முதல்லருந்தா.. தெலுங்கு இயக்குநருடன் கைகோர்க்கும் விஜய்?
சென்னை: வாரிசு படத்தில் நடித்த விஜய் மீண்டும் தெலுங்கு இயக்குநருடன் இணையப்போகிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்திய அளவில் மிகப்பெரிய வியாபாரம் உடைய நடிகர்களில் விஜய்யும் ஒருவர். இவர் சமீபத்தில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவருடன் சரத்குமார், ஷாம், பிரகாஷ்ராஜ், ராஷ்மிகா, சங்கீதா, ஜெயசுதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்தார். தில்ராஜு தயாரித்திருந்தார்.

வாரிசுக்கு கிடைத்த கலவையான விமர்சங்கள்
துணிவு படத்துடன் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியானது வாரிசு. தோழா படத்தை இயக்கிய இயக்குநர் வம்சி என்பதாலும், அவருடன் விஜய் முதல்முதலாக கைகோர்த்திருக்கிறார் என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு இருந்தது. ஆனால் படம் எதிர்பார்த்தபடி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. மாறாக கலவையான விமர்சனங்களையே படம் பெற்றது.

வம்சிக்கு குவிந்த கண்டனங்கள்
குறிப்பாக படத்தில் காட்டப்பட்ட வீட்டிலிருந்து எதுவுமே ரியாலிட்டியோடு எளிய ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. மேலும், படம் முழுக்க தெலுங்கு வாடை அடித்ததாகவும்; விஜய்யின் மேனரிசங்களும், பாடி லாங்குவேஜும் ரசிக்கும்படி இல்லை எனவும் சமூக வலைதளங்களில் நேரடியாகவே சிலர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனால் விஜய் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆகவே செய்தனர்.

நம்பர் 1 பிரச்னையை கிளப்பிவிட்ட தயாரிப்பாளர்
வாரிசு படம் வெளியாவதற்கு முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு, 'தமிழ்நாட்டில் விஜய்தான் நம்பர் 1. எனவே வாரிசு படத்துக்கு அதிக அளவிலான திரையரங்குகளை ஒதுக்க வேண்டும்' என கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது. அதுமட்டுமின்றி தெலுங்கு தயாரிப்பாளருக்கு தமிழ்நாட்டின் வியாபாரம் பற்றி என்ன தெரியும்; அவர் இப்படி பேசுவது வேண்டாத வேலை என்றும் தமிழ்நாட்டில் கண்டன குரல்கள் எழுந்தன. மேலும், தெலுங்கு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருடன் விஜய் எதற்காக கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் சிலர் கேள்வி எழுப்பினர்.

மீண்டும் விஜய்யை இயக்கும் தெலுங்கு இயக்குநர்?
இந்நிலையில் நடிகர் விஜய் மீண்டும் தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்ட அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கு இயக்குநரை நம்பி வாரிசு படத்தில் நடித்து சூடு வாங்கிக்கொண்ட விஜய் மீண்டும் தெலுங்கு இயக்குநருடன் இணைய வேண்டுமா என ரசிகர்கள் சிலர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, மிஷ்கின், கௌதம் வாசுதேவ், அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











