உங்கள் அண்ணனாக மன அழுத்தத்தில் இருக்கிறேன்.. விஜய் கைப்பட எழுதிய கடிதம் ட்ரெண்டிங்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் களத்தில் முழுதாக செயல்பட தொடங்கியிருக்கிறார் விஜய். சில வாரங்களுக்கு முன்பு நடந்த எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில்கூட திமுகவை கடுமையாக சாடினார் அவர். இந்தச் சூழலில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து விஜய் தனது கைப்பட கடிதம் எழுதியிருக்கிறார். அது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். GOAT படத்தில் நடித்து முடித்துவிட்டு இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என்று அறிவித்திருக்கும் அவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 69ஆவது படத்தில் நடித்துவருகிறார். அதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கிறார்கள். விஜய்யின் கடைசி படம் அது என்பதால் எப்படியாவது மெகா ஹிட்டாக அமைந்துவிட வேண்டும் என்பதில் அவரது ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அரசியல் மேடையில்: ஒருபக்கம் தனது கடைசி படத்தில் நடித்துவரும் அவர் மறுபக்கம் அரசியல் மேடையிலும் சுற்றி சுழன்றுவருகிறார். முதலில் விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்திய அவர்; தமிழ்நாட்டில் திமுகதான் தங்கள் அரசியல் எதிரி என்று பிரகடனப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக திமுகவினரும் தங்களது கருத்தினை காட்டமாக முன்வைத்து வருகிறார்கள். முக்கியமாக Work From Home அரசியல் அவர் செய்கிறார் விஜய் என்று விமர்சிக்கின்றனர்.
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்: அடுத்ததாக எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட விஜய் அந்த மேடையிலும் திமுகவை விமர்சனம் செய்தார். இதனால் விஜய் Vs திமுக என்கிற நிலை தீவிரமடைந்திருக்கிறது. சூழல் இப்படி இருக்க சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சில நாட்களுக்கு முன்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அது மிகப்பெரிய அதிர்ச்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய்யின் கடிதம்: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தவெக தலைவர் விஜய் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் அவர், “அன்பு தங்கைகளே கல்வி வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், எனதருமை தங்கைகள், குழந்தைகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளை கண்டு உங்கள் அண்ணனாக மன அழுத்தத்துக்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன்.
சாத்தியமாக்குவோம்: யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்த பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இந்தக் கடிதம். எல்லா சூழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். அண்ணனாகவும் அரணாகவும். எனவே எதை பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகப்பான தமிழ்நாட்டை படைத்தே தீருவோம். அதற்கான உத்திரவாதத்தை நாம் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்” என்றார்.


Click it and Unblock the Notifications











