Vijay: தலைமை தேர்தல் அதிகாரியிடம் விஜய் புகார்.. என்னென்ன சொல்லி இருக்காரு பாருங்க!
சென்னை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மற்ற கட்சிகள் எல்லாம் பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகின்றன. இம்முறை தேர்தல் களம் நான்கு முனை களமாக இருப்பதால் வழக்கத்தை விடவும் சூடு பறக்கிறது. இப்படி மற்ற மூன்று முனைகளிலும் இருக்கும் திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். இதில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழரின் சீமான் உள்ளிட்டோர் ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.
அரசியல் களத்தில் பலரும் எதிர்பார்க்கும் தமிழக வெற்றிக் கழக்த்தைச் சேர்ந்த விஜய் இன்னும் பிரச்சாரத்தை தொடங்கவில்லை. மாறாக அவர் தனது பிரச்சாரத்திற்கு அனுமதி தர மறுக்கிறார்கள். அதற்கு திமுக தான் காரணம் என்று ஏற்கனவே எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதேபோல் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து, புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அதாவது, அவரது புகாரில், திமுகவிற்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும் , அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார். இவரது இந்த புகார் குறித்து நெட்டிசன்கள் பலரும், விஜய் களத்திற்கு வந்து அரசியல் செய்யாமல், நாள் தோறும் புகார் மனுவுடன் அரசு அதிகாரிகளைச் சந்தித்து வருகிறாரே, இவர் எப்போதுதான் பிரச்சாரத்தை தொடங்குவார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இது தொடர்பாக ஏற்கனவே தனது எக்ஸ் பக்கத்தில் திமுகவை குற்றம் சாட்டி இருந்தார் விஜய். அதில், “தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும்.
அனுமதி கேட்டு: நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன??
திமுக அரசு: இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் தி.மு.க. காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா? தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க. அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
மக்கள் ஆதரவு: மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் "எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்" என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும். தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் தி.மு.க. ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி” பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











