Vijayakanth: "திரையுலகம் தந்த ஒப்பற்ற மனிதர்..” விஜயகாந்த் மறைவு... கண்கலங்கிய சிவகார்த்திகேயன்
சென்னை: கேப்டன் விஜயகாந்த் மறைவு திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோலிவுட்டின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விஜயகாந்த். இந்நிலையில், விஜயகாந்த் மறைவுக்கு சிவகார்த்திகேயன் மிக உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்துக்கு சிவகார்த்திகேயன் இரங்கல்
தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர்களில் கேப்டன் விஜயகாந்த்தும் ஒருவர். பல இளம் ஹீரோக்களுக்கு ரோல் மாடலாக இருந்தவர் என்றால் அது மிகையாகாது. அதேபோல் தான் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் பலரும் விஜயகாந்த் குரலில் பேச ரொம்பவே ஆர்வம் கொள்வது உண்டு. அப்படி விஜயகாந்தின் குரலில் மிமிக்ரி செய்து பிரபலமானவர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர்.

விஜய் டிவியின் கலக்கப் போவது நிகழ்ச்சிகளில் சிவகார்த்திகேயன் பல முறை விஜயகாந்தை போல மிமிக்ரி செய்து அதகளப்படுத்தியுள்ளார். அதேபோல் சினிமாவில் ஹீரோவாகிவிட்ட பின்னர் கூட விஜயகாந்த் சார் போல பல நல்ல விஷயங்களை செய்வேன் என கூறி வந்தவர் சிவகார்த்திகேயன். அயலான் பட ப்ரொமோஷன் நிகழ்ச்சிக்கான ஒரு யூடியூப் பேட்டியில் கூட விஜயகாந்த் குறித்து நெகிழ்ச்சியாக பேசியிருந்தார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில், விஜயகாந்தின் மறைவுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். அதில், "தமிழ்த் திரையுலகம் நமக்குத் தந்த ஒப்பற்ற மாமனிதர் புரட்சிக் கலைஞர் திரு. விஜயகாந்த் அவர்களின் மறைவு குறித்த செய்தி என்னை ஆழ்ந்த துயருக்குள் ஆழ்த்திவிட்டது. எத்தனையோ கோடி உள்ளங்களின் அன்புக்குச் சொந்தக்காரர், அள்ளித்தரும் பண்புக்கும், அரவணைப்பும் தலைமைப் பண்பும் தனக்கே உரிய பாணியில் கொண்ட மேம்பட்ட மனிதர், பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர்"
"அன்பால் பண்பால் அறத்தால் மறத்தால் நம் அனைவரின் அன்பையும் ஆதரவையும் வெற்றி கொண்டவர். அவரது மறைவு திரை உலகம் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் ஓர் மிகப்பெரிய இழப்பு. புரட்சிக் கலைஞர் திரு. விஜயகாந்த் அவர்களின் மறைவால் வாடும் அனைவருக்கும் இந்த நேரத்தில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











