Vijayakanth: "போராடி வென்றவர்... பசியாற்றிய வள்ளல்..” விஜயகாந்துக்கு ஏஆர் ரஹ்மான் இரங்கல்!
சென்னை: கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விஜய், இளையராஜா, மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நிலையில், ஏஆர் ரஹ்மான் டிவிட்டரில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் மறைவுக்கு ஏஆர் ரஹ்மான் இரங்கல்: திரையுலகில் புரட்சிக் கலைஞர், கேப்டன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜயகாந்த், நேற்று காலை உயிரிழந்தார். சில மாதங்களாகவே விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் உயிரிழந்ததை அறிந்த ரசிகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த திரண்டு வருகின்றனர். அதேபோல் திரை பிரபலங்களும் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று மாலை இறுதிச் சடங்கு செய்யப்படவுள்ளதால், விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள ஏஆர் ரஹ்மான், திரைத்துறையில் கதாநாயகனாக தான் உண்ணும் அதே தரமான உணவே எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று போராடி வென்றார். பசியாற்றிய வள்ளல் என்று இன்று எல்லோரும் அவரைப் புகழ்வது நெகிழ்ச்சியாக இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
விஜயகாந்த் படங்களுக்கு இதுவரை ஏஆர் ரஹ்மான் இசையமைத்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் போன்ற 90'ஸ் ஹீரோக்களுக்கு இசையமைத்துள்ள ஏஆர் ரஹ்மான், விஜயகாந்த் படத்துக்கு மட்டும் இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. முன்னதாக விஜயகாந்த் உயிரிழந்த துக்கத்தை ரசிகர்கள் பல வீடியோக்கள் போட்டு ட்ரெண்ட் செய்து வந்தனர்.
அதில் விஜய்யின் பிகில் படத்தில் இடம்பெற்ற 'காலமே காலமே' என்ற சோகப் பாடலை விஜயகாந்துக்காக எடிட் செய்திருந்தது நெகிழ்ச்சியாக அமைந்தது. இதனிடையே விஜய, இளையராஜா, இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். இன்று மாலை தான் விஜயகாந்த் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளதால் மேலும் பல நட்சத்திரங்கள் நேரில் அஞ்சலி செலுத்த வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











