Vijayakanth: “விஜிண்ணே நலமோடு மீண்டும் வர வேண்டும்..” கேப்டனை நினைத்து உருகிய பிரபலம்!
சென்னை: முன்னணி நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் உடல்நலத்துடன் மீண்டு வர வேண்டும் என லியாகத் அலி கான் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

விஜிண்ணே நலமோடு வர வேண்டும்
தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்தவர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த். 1990களில் சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல்ஹாசன் வரிசையில் டாப் ஹீரோவாக மாஸ் காட்டி வந்தார். ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்த விஜயகாந்த், சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் தீவிரமாக கவனம் செலுத்தினார்.
அவரது தலைமையில் உருவான தேசிய முற்போக்கு திராவிட கட்சி அரசியலில் தனித்து காணப்பட்டது. இதனிடையே கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார் கேப்டன். இந்நிலையில் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து அடுத்தடுத்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
விஜயகாந்தின் உடல்நிலை, ஏற்றம் இறக்கமாக காணப்படுவதாகவும், ஒருநேரம் போல் மற்றொரு நேரம் அவருடைய உடல்நிலை இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சளி அதிகமாக இருப்பதால் அவரது சுவாசத்தில் சிரமம் ஏற்படுகிறது. தொடர்ந்து உடல்நிலை சோதனை செய்ய இடைவிடாது மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார் கேப்டன்.
இந்நிலையில், விஜயகாந்த் விரைவில் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என பிரபல இயக்குநர் லியாகத் அலி கான் பதிவிட்டுள்ளார். விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான லியாகத் அலி கான், கேப்டனின் பாட்டுக்கு ஒரு தலைவன், எங்கள் ஜாதி, எங்க முதலாளி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் திரைப்படங்களில் விஜயகாந்த் பேசிய பல புரட்சிகரமான வசனங்களை எழுதியவரும் இவரே.
புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், மாநகர காவல் என பல படங்களில் வசனம் எழுதியுள்ளார். இந்நிலையில், விஜயகாந்த் உடல்நலம் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். "என் பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய விஜிண்ணே, உங்கள் லியாகத் அலிகான் பதிவும் பிரார்த்தனையும் அண்ணே. உங்களை நான் அண்ணன் என்றே அழைப்பேன், நீங்கள் எனக்கு இறைவன் கொடுத்த சகோதரர்."
https://www.facebook.com/photo/?fbid=6650712938389111&set=a.134887083305095
"உங்களால் வளர்ந்தவர்கள் பலர், உயர்ந்தவர்கள் பலர், பசியாறியவர்கள் பலர். உங்களைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் இந்த உலகத்திலேயே சிறந்த மனிதர் நீங்கள். என் இதயத்தில் மட்டுமல்ல, கோடிக்கணக்கான தமிழர்களின் இதயங்களிலும் இந்த எண்ணம் தான் இருக்கும். இறைவன் நேரில் வந்து மக்களுக்கு உதவ முடியாது என்பதால் தான் உங்களை அனுப்பி வைத்தான்."
"அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன், இறைவா எனது விஜி அண்ணனுக்கு நீண்ட ஆயுளை கொடு. அவரால் பலர் வாழ்வில் விளக்கேற்றி வை. விஜிண்ணே நீங்கள் நலமோடு மீண்டும் வர வேண்டும்." என உருக்கமாகக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











