Vijayakanth: விஜயகாந்துடன் நடிக்க மறுத்த நாயகிகள்... ஒரேயொரு சம்பவம்... எல்லாத்தையும் மாத்திடுச்சு!
சென்னை: கேப்டன் விஜயகாந்தின் மறைவு திரையுலகிற்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது. சினிமா பின்னணியே இல்லாமல் திரையுலகில் ஹீரோவான விஜயகாந்தின் ஆரம்ப காலம் பல அவமானங்களையும் வலிகளையும் கடந்தது. குறிப்பாக அப்போது முன்னணியில் இருந்த பல நாயகிகள் விஜயகாந்துடன் நடிக்க மறுப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால் பின்னாளில் அவர்கள் அனைவரும் விஜயகாந்துடன் போட்டிப் போட்டு நடித்தது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்துடன் நடிக்க மறுத்த நாயகிகள்: நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் நேற்று காலை காலமானார். தமிழ்த் திரையுலகில் தனிப் பெரும் சகாப்தமாக வாழ்ந்துக் காட்டியவர் விஜயகாந்த். மதுரையில் வசதியான குடும்பத்தில் பிறந்த விஜயகாந்த் ரைஸ்மில் வைத்து நடத்தி வந்தார். அதன்பின்னர் சினிமாவில் இருந்த ஆர்வம் காரணமாக சென்னை சென்று பட வாய்ப்புகளைத் தேடினார்.

விஜயகாந்துடன் அவரது நெருங்கிய நண்பருமான இப்ராஹிம் ராவுத்தரும் சென்னை சென்று கேப்டனின் சினிமா கனவை நனவாக்க உதவி செய்தார். கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடினார் விஜயகாந்த். ஒரு வழியாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான விஜயகாந்த் அவ்வளவு எளிதாக வெற்றிப் பெறவில்லை. ஆரம்ப காலங்களில் விஜயகாந்துடன் ஜோடியாக நடிக்க முடியாது என அப்போதையை முன்னணி நடிகைகள் மறுத்துள்ளனர்.
இதுபற்றி 1986ம் ஆண்டு விஜயகாந்த் ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியிருந்தார். அதில், "இங்கிலீஷ்ல 'இன்சல்ட்'னு சொல்வாங்களே அதுதான். சினிமா இண்டஸ்ட்ரியில ரொம்ப அதிகமான அவமானங்களைத் தாங்கிக்கிட்டவங்களில் ஒருத்தன் நான். சென்னை பாண்டி பஜார் ரோஹிணி லாட்ஜ்ல இருபதாம் நம்பர் ரூம்ல வந்து தங்கினேன். அந்த லாட்ஜ்ல சினிமா லட்சியத்தோடு பல இளைஞர்கள் இருந்தாங்க. பாக்யராஜ், ஆர். சுந்தர்ராஜன் இவங்களாம் இருந்தாங்க."
"முதல்ல, டைரக்டர் எம்.ஏ.காஜா, 'இனிக்கும் இளமை' படத்தில் அறிமுகப்படுத்தினார். அப்ப விளம்பரங்கள்ல என் நிஜப் பெயரான 'விஜயராஜ்' தான் இருந்தது. அப்புறம்தான் வேறு நடிகர் விஜயராஜ்ங்கிற பேர்ல வந்துகிட்டிருக்கார்னு தெரிய வர, காஜாதான் உடனே விஜயகாந்த்னு பேர் வெச்சார். முதல் நாள் ஷூட்டிங், அடையாறு மேனன் பங்களாவில் நடந்தது. இந்த சினிமாவுலகிலே புது நடிகன்னா யாரும் மதிக்கக்கூட மாட்டாங்க. தீண்டத்தகாதவன் மாதிரி புதுமுகங்களுக்கு சாப்பாடு போடுவாங்க. அப்ப சுதாகர், மீரா, ராதிகாவெல்லாம் ஏற்கெனவே பாப்புலர். அவங்களுக்கெல்லாம் ஏக உபசரிப்புகள்! நான் ஒரு மூலையிலே நின்னுக்கிட்டிருப்பேன்."
"ஆனா, 'இனிக்கும் இளமை' படம் வெளிவந்ததும், என் பெயர் கொஞ்சம் வெளியே தெரிய வந்தது. அதை வைத்து விடாம பல இயக்குநர்களைச் சந்தித்தேன். பார்க்கிறவர்கள் எல்லாருமே, 'அதுதான் ஒரு ரஜினிகாந்த் இருக்காரே, நீ எதுக்கு விஜயகாந்த்'னு சொல்லுவாங்க. அன்னிக்கு அப்படிக் கேட்ட பலருடைய படத்துல இப்ப நான் ஹீரோ. நினைச்சுப் பார்த்தா தமாஷாத்தான் இருக்கு! 'அகல் விளக்கு' படத்துக்கு எனக்கு சான்ஸ் வந்தது. இந்தப் படத்துல தான் நிறைய அவமானங்கள். அப்போ ஷோபா ரொம்ப பாப்புலர். பிஸி ஆர்ட்டிஸ்ட். 'அகல் விளக்கு' படப்பிடிப்பு அன்னிக்குக் காலையிலேருந்து மத்தியானம் சாப்பாட்டு வேளை வரைக்கும் ஷோபா வரலை."
"எனக்கு நல்ல பசி. பசி பொறுக்காம கடைசியிலே மதியம் சாப்பிட உட்கார்ந்தேன். உடனே ஷோபா வந்துட்டாங்கனு சொல்லி, சாப்பிடக்கூட விடாம பாதியிலேயே எழுப்பி இழுத்துக்கிட்டுப் போனாங்க. ஒரு நிமிஷம் மனசு கலங்கிட்டேன். இதையெல்லாம் மீறி தட்டுத்தடுமாறி முன்னுக்கு வந்துக்கிட்டிருந்தேங்கறது உண்மை! எஸ்.ஏ. சந்திரசேகர் 'சட்டம் ஒரு இருட்டறை' படத்துக்கு என்னை புக் பண்ணினார். 'ஒருதலை ராகம்' படம் அப்போ நல்லா ஓடிக்கிட்டிருந்தது. அதில் நடிச்ச ஒரு நடிகர் தனக்குத்தான் அந்த ரோலைத் தரணும்னு டைரக்டர்கிட்ட பிரஷர் கொடுத்தாரு. ஆனால், தயாரிப்பாளர் சிதம்பரம் 'நான் படம் பண்ண வந்திருக்கேன். என் இஷ்டப்படிதான் படம் பண்ணுவேன். என் படத்திலே ஒரு தமிழன் தான் நடிக்கணும்'னு சொல்லிட்டார்."
"சட்டம் ஒரு இருட்டறை ரிலீஸாச்சு. படம் நல்ல ஹிட். பல மொழிகளில் அந்தப் படத்தை எடுத்தாங்க. அதுக்குள்ள ரோஹிணி லாட்ஜுலேயிருந்து பக்கத்துக் கட்டடத்துல ஒரு ரூமுக்கு மாறியிருந்தோம். அதில்தான் நானும் என் நண்பன் இப்ராஹிமும் இருப்போம். நான் ஷூட்டிங் போயிட்டா இப்ராஹிம்தான் என் பேன்ட், ஷர்ட்டெல்லாம் 'வாஷ்' பண்ணுவான். என்னைப் பார்க்க யார் வந்தாலும், அவன் டீ, காபி வாங்கிக்கிட்டு வருவான். ரூம்ல நானும் அவனும் மட்டும் இருப்போம். 'சட்டம் ஒரு இருட்டறை' ரிலீஸானதும், ரூம்ல ஏகக் கூட்டம். ஆனால், பல மாதங்கள் சினிமாக்காரங்க பின்னால் அலைஞ்சதனால் நல்லவங்க யாரு, கெட்டவங்க யாருன்னு எங்களால் புரிஞ்சுக்க முடிஞ்சது. ஆட்களைத் தேர்ந்தெடுத்துப் படம் ஒப்புக்கிட்டோம். அதுக்கப்புறம் சில படங்கள். எல்லாமே ஃபெயிலியர்."
"மறுபடியும் ரூம்ல நானும் இப்ராஹிமும் மட்டும்தான்! ஒரு வருஷம் சும்மா இருந்தோம். அதுக்கப்புறம்தான் பி.எஸ்.வி. பிக்சர்ஸ் 'சாட்சி' படம் வந்தது. ஹிட் ஆச்சு. ஒரு வழியா நின்னேன்! இந்த அவமான கட்டங்களைத் தாண்டிய பிறகு மட்டும் என்ன வாழ்ந்தது? அடுக்கடுக்காகத் திரைமறைவு சூழ்ச்சிகள் நடந்துக்கிட்டே இருந்தன. 'பார்வையின் மறுபக்கம்' படம் ஊட்டியில் ஷூட்டிங். எனக்கு ஜோடி ஸ்ரீப்ரியா. ஊட்டி போய்க் காத்துக் கிடந்தோம். அவங்க வரலை. விசாரிச்சா, என்னோடெல்லாம் அவங்க நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம். இதை அவங்ககிட்டேயே கேட்டேன். அதே மாதிரி சரிதாவும் என்னோட நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க."
"எனக்குக் காரணமே புரியலை. 'நான் அவங்ககூட நடிக்க விரும்பலை'ன்னு சொன்னதாக யாரோ சரிதாகிட்டே சொன்னாங்களாம். இந்த மாதிரி பிரச்னைகளை வளரவிடக் கூடாதுன்னு முடிவு பண்ணி, நானே நேரே சரிதா வீட்டுக்குப் போனேன். அவங்க அம்மாவும் தங்கையும் இருந்தாங்க. 'இதப் பாருங்க... நான் உங்க பொண்ணுகூட நடிக்கமாட்டேன்னு சொல்லலை. யாராவது சொன்னதை நம்பாதீங்க. உங்க பொண்ணுகூட நடிச்சாத்தான் எனக்கு வாழ்க்கைங்கறதுக்காக நான் நேரா உங்க வீட்டுக்கே வந்து கேட்கிறேன்னு நினைக்க வேண்டாம். கலைஞர்களுக்குள்ள உட்பூசல் இருக்கக்கூடாது. அதுக்காகத்தான் வந்தேன்'னு பளிச்சுனு சொல்லிட்டு வந்துட்டேன். அதேமாதிரிதான் ராதிகாவும் என்னோட நடிக்க விருப்பப்படலை!"
"இன்னிக்கு இவங்கள்லாம் என்னோட நடிக்கிறாங்க. அதுக்குப் பிறகு ராதிகாவும் நானும் நிறைய படங்கள்ல நடிச்சோம், நடிச்சிக்கிட்டு இருக்கோம். ஆரம்பத்தில் இவங்க, நடிக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சாங்கன்னு சொல்றதை விட, என் பக்கம் திரும்பாம ஒதுங்கிக்கிட்டாங்க என்பதுதான் உண்மை. தப்பு இவங்க பேர்ல இல்லை. இவங்களுக்குப் பின்னால் பெரிய சக்திகள் இயங்கிக்கிட்டிருந்தது. இவனோடெல்லாம் நடிச்சா, உங்க இமேஜ் கெட்டுடும் என்கிற பயமுறுத்தல் நிறைய இருந்தது."
"சாதாரண பெண்களுக்கே தங்களுக்குப் பாதுகாப்பில்லைன்னு எப்பவும் மனசுல ஒரு பயம் இருக்கும். சினிமாவில் இருக்குற பெண்களுக்குக் கேட்க வேண்டுமா..? எப்பவும் Insecured-ஆ நினைப்பாங்க. இந்த ஃபீலிங், சம்பந்தப்பட்ட இந்த நடிகைகளுக்கும் இருந்ததில் வியப்பென்ன..? பின்னால் இந்த நடிகைகள் என்னோட நடிக்க ஆரம்பிச்ச பிறகுதான் அவங்க மனசுல களங்கமில்லேனு புரிஞ்சுக்கிட்டேன்" என விஜகாந்த் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











